பக்கம்:இந்து தேசியம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொ.பரமசிவன் 55

வெளியில் தங்கள் சாதி அடையாளத்தைத் தேடத் தொடங்கினர். இதனை சாதியப் பத்திரிகைகளின் தொடக்கக் காலம் எனலாம்.
மொழி எல்லைகளைக் கடந்த தேசியம் என்ற கருத்தாக்கம் பார்ப்பனர்களுக்கு ஏற்புடையதாக இருந்ததால் 1880இல் பி.சிவசாமி அய்யரும், அனந்தாச்சார்லு என்பவரும் சேர்ந்து 'மெட்ராஸ் மகாஜன சபா' என்ற அமைப்பினைத் தொடங்கினர். இதுவே தமிழ்நாட்டில் இந்திய தேசியம் பேசிய முதல் அமைப்பாகும். இந்த அமைப்பின் முன்னணித் தலைவர்களில் சேலம் இராமசாமி முதலியார் தவிர எஞ் சிய அனைவரும் பார்ப்பனர்கள். 1884இல் இவர்கள் சென்னையில் தங்கள் அமைப்பின் முதல் மாநாட்டைக் கூட்டினர். காலனிய அரசுக்கு இந்திய தேசியம் என்ற கருத்தாக்கம் அன்றைக்குத் தேவையாக இருந்தது. 1881இல் பணி ஓய்வு பெற்ற ஃகியூம் (Hume) என்ற ஐசிஎஸ் அதிகாரி' இவர்களோடு (சில கருத்து வேறுபாடுகளுடன்) இணைந்து வேலை செய்ய முன்வந்தார். அதன் விளைவாக 1884இல் புனா நகரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு 8 பேர் சென்றனர். இவர்களில் 6 பேர் பார்ப்பனர்கள். 1881இல் பிரம்மஞான சபை நிறுவிய கர்னல் ஆல்காட்டும், பிளாவட்ஸ்கி அம்மையாரும் சென்னை வந்தனர்.
ஆரிய நாகரிகமும் வடமொழி வேதங்களும் உலகிற்கே வழிகாட்டும் என்பது அவர்களது கருத்தாகும். அழைப்பின் பேரில் அப்பொழுது கிறித்துவம் கணிசமாகப் பரவியிருந்த திருநெல்வேலிக்கு அவர்கள் சென்றனர். திருநெல்வேலி நெல்லையப்பர்கோவிலில் பூரண கும்ப மரியாதையும், வரவேற்பும் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. கோயில் வளாகத்தில் அவர்கள் இருவரும் கூட்டம் ஒன்றிலும் பேசினர். "மலை மீது கட்டப்பட்ட கோட்டைபோல இந்திய நாகரிகம் என்பது வேதங்களின் மீதும் புனித நூல்களின் மீதும் கால் கொண்டு நிற்கின்றது" (An Indian Civilization resting upon the vedas and other National Works is like a strong castle built upon rocks) என்பது ஆல்காட் வெளியிட்ட கருத்தாகும். ஆரியன் என்ற கருத்தாக்கம், இந்து என்ற கருத்தாக்கம் இரண்டும் உருவாகி வந்த இந்திய தேசியத்திற்குள் புகுந்து கொண்டன. பின்னர் வந்த இந்திய தேசியக் காங்கிரசின் பெரும் தலைவர்களான திலகர், ரானடே, பண்டித மதன் மோகன் மாளவியா, அன்னிபெசன்ட் ஆகியோரும் இதே கருத்தாக்கங்களையே உயர்த்திப் பிடித்தனர். 1927இல் தமிழ்நாட்டில் காந்தியடிகள் வெளிப்படையாகவே தேசிய இயக்கத்திலிருந்து முற்றிலுமாக வெளியேறச் செய்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/56&oldid=1689609" இலிருந்து மீள்விக்கப்பட்டது