பக்கம்:இந்து தேசியம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொ.பரமசிவன் 57

இந்திய தேசியமும் திராவிட தேசியமும் : உறவுகளும் முரண்களும்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து நமது தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்ட அசைவுகளைக் குறித்து தமிழ்நாட்டு, வெளிநாட்டு ஆய்வாளர்கள் சிலர் அண்மைக் காலத்தில் நிறைய எழுதியுள்ளனர். அவர்களுடைய எழுத்துக்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டு அமைகின்றன.
ஆர்.சுந்தரலிங்கம் 1852-1891. டி.ஏ.வாஸ்புருக் 1870-1920, கிறிஸ்டோபர் பேக்கர் 1920-1937, யூஜின் இர்ஷிக் 1919-20, 1930கள் (இருநூல்கள்), ஈ.சா.விஸ்வநாதன் 1920-49. கே.நம்பி ஆரூரன் 1905-44 ஆகியோரின் நூல்கள் இந்த வரிசையில் குறிப்பிடத்தக்கவை. இவை தவிர முரசொலி மாறன். எஸ்.சரசுவதி. எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா, இரா.வேங்கடாசலபதி, கேசவன் ஆகியோரின் நூல்களும், ஆனந்தி, எம்.எஸ்.எஸ்.பாண்டியன், அ.மார்க்ஸ், பொ.வேல்சாமி ஆகியோரின் கட்டுரைகளும் இத்துறையில் குறிப்பிடத்தகுந்த முயற்சிகளாகும். மிக நீண்ட காலப் பகுதியினை ஆய்வுப் பொருளாக எடுத்துக்கொண்டு, 'இந்தியத் தேசியமும் திராவிடத் தேசியமும்' என்ற நூலை குணா எழுதியுள்ளார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி தொடங்கி பெரியாரின் இறுதிக்காலம் வரையுள்ள தமிழ்நாட்டுச் சமூக அரசியல் வரலாற்றை நான்கைந்து கால கட்டங்களாகப் பகுத்துப் பார்ப்பது, இந்தியத் தேசியத்தின் உருவாக்கம், வளர்ச்சி வாழ்வு இவற்றோடு தமிழ்ச் சமூகம் கொண்ட உறவுகளையும், முரண்களையும் விளக்க ஓரளவு போதுமானதாக அமையும் என நம்பலாம்.
இக்கால பகுப்பைப் புரிந்துகொள்ளும் முன் தேவையாக ஆரியன் x தமிழன், ஆரியம் x திராவிடம், இந்து x தமிழர் ஆகிய எதிர்நிலைச் சொற்கள் எந்த எந்தப் பொருளில் காலந்தோறும் ஆளப்பட்டன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்' என்ற திருநாவுக்கரசர் தேவாரத்தில், வடமொழியாளர் X தமிழர் என்ற பொருளில் இது கையாளப்பட்டுள்ளது. 'ஆரியன் என்று தமிழரல்லாத வடமொழியாளரைக் குறிப்பிடும் சொற்பயன்பாட்டில் இதுவே காலத்தால் மூத்ததாகும். 'பஞ்சதிராவிடீ' எனத் தென்னாட்டுப் பிராமணர்கள் தங்களை அழைத்துக் கொண்டபோது திராவிடம் என்ற சொல் தமிழ். தெலுங்கு. மலையாளம், கன்னட, துளு நிலப்பகுதிகளைக் குறிக்கிறது. அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் 'ஆச்சார்ய ஹிருதம்' என்ற தத்துவ நூலில் (14ஆம் நூற்றாண்டு வேதம் பஹூவிதம்' வைணவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/58&oldid=1690747" இலிருந்து மீள்விக்கப்பட்டது