பக்கம்:இந்து தேசியம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66 'இந்து' தேசியம்

தேசிய இனத்தின் முதல் அடையாளமான மொழி பற்றிய தன்னுணர்ச்சி தமிழ்நாட்டில் அரும்பியிருந்தது. பார்ப்பனிய புராண மரபுகளிலிருந்து பெரிதும் தள்ளி நின்ற சங்க இலக்கியங்களின் அறிமுகம், தமிழர்களின் வேதமல்லா மரபினை விளக்கிய கனகசபைப் பிள்ளையின் நூல் (ஆயிரத்தொண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்) 1904இல் பாண்டித்துரைத் தேவர் தொடங்கிய மதுரைத் தமிழ்ச் சங்கம் ஆகியன இவ்வகையில் குறிப்பிட்ட தமிழ்க் காரணிகளாகும். 1914 மைசூர் பல்கலைக்கழகம் தொடங்கப்படுகிறது." சென்னைப் பல்கலைக்கழகத்தில் பார்ப்பனர் ஆதிக்கமும், பிற திராவிட மொழியாளர் அதில் நிறையப் பங்கு பெற்றிருந்ததும் சேர்ந்து தமிழ்நாட்டின் தென்பகுதியில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று வேண்டும் என்ற உணர்வும் கோரிக்கையும் எழக் காரணமாகின்றன. 1920களில் இக்கோரிக்கை வலுப்பெறுகிறது. சென்னைப் பல்கலைக்கழகப் பேரவைக் (செனட்) கூட்டத்திலும் இது எழுப்பப் பெறுகிறது. விளைவாக 1920இல் சிதம்பரத்தில் மீனாட்சி கல்லூரி அமைக்க ராஜா சர். அண்ணாமலை செட்டியாருக்கு அனுமதி தரப்படுகிறது. அவர் அதற்கு 20 லட்சம் நன்கொடை அளிக்கிறார்.
மீண்டும் சேலம் மாகாணக் கல்வி மாநாட்டில் இக்கோரிக்கை எழுப்பப் பெற்று தமிழறிஞர் மு.சு பூரணலிங்கம் பிள்ளை தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப் பெறுகிறது. 36 தமிழ் மொழிக்கென மட்டும் ஓர் பல்கலைக்கழகம் அமைவது குறுகிய பார்வை என்று 1926 சனவரி (28), யில் ஒரு கட்டுரையும் ஜூன் 17இல் ஒரு தலையங்கமும் எழுதியது 'இந்து' நாளிதழ். தமிழ் தேசிய இன உணர்வு கூர்மை அடையக் கூடாதெனப் பார்ப்பனியம் கவனமாகவே பணியாற்றியிருக்கிறது. இதனை இன்னொரு செய்தியுடன் 'இணைத்துப் பார்க்க வேண்டும். 16- 09-43 இதழில் (விடுதலை) 'சபாஷ் சர்.சி.பி.' என்ற ஒரு தலையங்கம், கோட்டையூர் ராம.அழகப்ப செட்டியார் தம் வீட்டு விழா ஒன்றின் நினைவாக, திருவாங்கூர்ப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை ஏற்படுத்த ரூ.10001 நன்கொடை தருகிறார். பணத்தைப் பெற்றுக் கொண்ட சர்.சி.பி. “தமிழ்மொழி வளர்ச்சிக்கும் வடமொழி வளர்ச்சிக்கும் கொடுப்பதாக. ஏற்றுக் கொள்கிறேன்" என்று பணத்தைப் பெற்றுக் கொண்ட பின் பேசுகிறார். இதை எழுதிவிட்டு "இதை எதிர்த்து கேட்கும் 'சுத்தத் தமிழன் இருக்கிறானா?" என்று எரிச்சலுடன் கேட்கிறார் பெரியார்.
1920களின் நடுப்பகுதியில் நடந்த சேரன்மாதேவி குருகுல நிகழ்ச்சியும் காஞ்சிபுரம் மாநாடும் பெரியாரைக் காங்கிரசில் இருந்து, வெளியேறச் செய்கின்றன. குருகுலத்தில் தீண்டாமையை எதிர்த்து எஸ்.இராமநாதன், காங்கிரஸ் காரிய கமிட்டியில் கொண்டு வந்த தீர்மானத்தை சீனிவாச ஐயங்கார் தவிர அனைத்துப் பார்ப்பனர்களும் உள்கட்சி வேறுபாடுகளை மறந்து எதிர்த்திருக்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/67&oldid=1703844" இலிருந்து மீள்விக்கப்பட்டது