68 'இந்து' தேசியம்
மேயர் சிவராஜ். மேயர் முனுசாமிப் பிள்ளை என தாழ்த்தப்பட்ட மக்கள் தலைவர்கள் அனைவரும் திராவிட இயக்கத்தோடு இணைந்து நின்றனர். 1932 பூனா ஒப்பந்தத்தின் மூலம் காங்கிரசு மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாவலன் என்ற மாயை உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.சி.ராஜா விபீடணன் ஆக்கப்பட்டு 1937இல் ராஜாஜி மந்திரி சபையில் அமைச்சராகவும் ஆக்கப்பட்டார். அதன் பின்னர் தாழ்த்தப்பட்ட மக்கள் திரள் மீண்டும் திராவிடக் கருத்தியல் நோக்கி நகர்வதற்கு 40 ஆண்டுக்காலம் ஆயிற்று. தலித் மக்களுக்கு என வலிமையாகத் திரண்ட ஒரு இயக்கம் 30 களிலும் 40 களிலும் காந்தி மாயையில் கரைக்கப்பட்டது. 40 ஆண்டுகாலம் தமிழ்நாட்டில் தலித் மக்கள் இயக்கமற்றுப் போயினர். இவர்களிலும் பெரும்பாலோர் தென்னிந்தியாவில் அம்பேத்காரை அங்கீகரித்த முதல் இயக்கம் திராவிட இயக்கம் என்பதையும் மறந்து போயினர். 1933லேயே அம்பேத்கரின் நூல்களை ஈரோடு குடியரசு பதிப்பகம் தமிழில் வெளியிட்டது.
1930களில் குடியரசு வெளியீடாகவும் ஈரோடு பகுத்தறிவு நூற்பதிப்புக் கழக வெளியீடாகவும் வெளியிடப்பட்ட அறிவு நூல்களின் தொகுதி மிகப் பெரியதாகும். இங்கர்சால், பெட்ரன்ட் ரஸ்ஸல் ஆகியோரின் மொழி பெயர்ப்பு நூல்களும் கே.பிரமச்சாரி என்பவர் எழுதிய பிரபஞ்ச உற்பத்தி (1930) பெரியார் எழுதிய பிரகிருதி வாதம் 1934 சிங்காரவேலரின் குடியரசு எழுத்துக்கள் ஆகியவை குறிப்பிட்டுச் சொல்லத் தகுந்தவையாகும்.
1937 இந்தி எதிர்ப்புப் போராட்டம் தந்த புதிய தெம்பில் 1938இல் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தைப் பெரியார் முன்வைத்தார்." 1937-44. கால கட்டத்தை வீரம் மிகுந்த திராவிட தேசியம் உருவான காலம் என்று வகைப்படுத்துகிறார் நம்பி ஆரூரன்” மிட்டாமிராசுகள் 1937லேயே திராவிட இயக்கத்தில் இருந்து விலகிக் கொண்டனர் என்றால், சமூகத்தின் மேல் தளத்து மக்கள் திராவிட இயக்கத்திலிருந்து 1944க்குள் விலகிக் கொண்டனர். 1949இல் அண்ணாவின் விலகல் திராவிடத் தமிழ் தேசியக் கருத்தியலுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாகும்.
1940களில் தமிழ்நாட்டில் அனைத்திந்திய தேசியத்தில் நிகழ்ந்த குறிப்பிடத்தகுந்த மாறுதல் காங்கிரசுக் கட்சியின் தலைமை நிரந்தரமாக பார்ப்பனரல்லாதாரின் கைக்கு மாறியதுதான். இதனைக் காங்கிரசுக்குள் இராஜாஜி என்ற இந்தியத் தலைவரைக் காமராசர் என்ற (அன்றைய) தமிழகத் தலைவர் வெற்றி கொண்ட கதை எனக் குறிப்பிடலாம்.