பக்கம்:இந்து தேசியம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொ.பரமசிவன் 79

வைக்கிறார். சிந்து வெளியினரான திராவிடரோடு வந்த புரோகிதர்களும் பின்னாளில் ஆரியராக வந்த பார்ப்பனர்களும் கலந்ததால் உருவானது தமிழக அந்தணர் கூட்டம் என்பது அவர் கருத்து. இதையும் மனத்தில் இருத்திக் கொள்ளலாம்.
ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டம் வெளியிலிருந்து பார்க்கும் போது ஒரே சாதி போலத் தோன்றினாலும் அதன் உள்ளாகப் பல அடுக்குகள் இருக்கின்றன. ஒரு சாதி என்பது ஒரு திருமண உள்வட்டமாகும். (Endogamous group) அதாவது ஒருவன் திருமணம் செய்யக்கூடிய எல்லையே அவனுடைய சாதியின் எல்லையாகும். எடுத்துக்காட்டாக வேளாளரில் தொண்டை மண்டல வேளாளர், கார்காத்த வேளாளர், வயலக வேளாளர் முதலிய பிரிவினரில் ஒருவர் மற்றவரோடு திருமண உறவு கொள்வதில்லை. யாதவர்களில் இவ்வகையான 27 பிரிவுகள் இருப்பதாகக் கூறுவர். இவர்களைப் போலவே பார்ப்பனர்களுக்கு உள்ளாகவும் கோத்திரம், சூத்திரம், வேதம், சாகை என்பனவற்றின் அடிப்படையில் அமைந்த பிரிவுகளும் உண்டு. பார்ப்பனர் அல்லாதார் புரிந்து கொள்வதற்கு வசதியாகப் பார்ப்பனர்களை மொத்தத்தில் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். 1. ஸ்ரீவைஷ்ணவர்கள், 2. அர்ச்சகர்கள் 3. ஸ்மார்த்தர்கள் என்பன.

ஸ்ரீ வைஷ்ணவர்கள்
ஐயங்கார், அல்லது ஆச்சாரியார் என்ற பட்டப் பெயருடைய அனைவரும் ஸ்ரீ வைஷ்ணவர்களே. விஷ்ணுவைக் கடவுளாகக் கொண்டதால் இவர்கள் வைஷ்ணவர்கள் ஆவர். இவர்கள் திருநீறு பூசுவதில்லை. நெற்றியில் U அல்லது Y வடிவத் திருமண் மட்டுமே அணிந்திருப்பர். நெற்றியில் அணிந்த திருமண்ணுக்குப் பாதம் இருந்தால் அவர் தென்கலை மரபினர். பாதம் இல்லாதவர் வடகலையார் ஆவார். வைகானச மரபினர், பாஞ்சராத்திர மரபினர் என்ற பிரிவுகளும் உண்டு. இப்பிரிவு ஆகம நெறியைப் பின்பற்றியதாகும்.
இவர்களில் தென்கலையினர் இராமாநுசரைப் பின்பற்றி சாதி வேறுபாட்டினை அதிகம் பாராட்டுவதில்லை. பார்ப்பனர் அல்லாத வைணவரோடு இப்பிரிவினர் மிகுந்த நெருக்கம் காட்டுவர். தமிழ் மொழிக்கும் ஆழ்வார்களின் பாடல்களுக்கும் மிகுந்த மதிப்பளிப்பவர். தமிழ்ப் பாடல்கள் இல்லவர்கள் வீட்டுத் திருமணம் நிறைவுறாது. திராவிட வேதம் என்னும் பெயரால் முதலில் அழைத்தவர்களும் இவர்களே. சேலம் விசயராகவாச்சாரியார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/80&oldid=1708877" இலிருந்து மீள்விக்கப்பட்டது