பக்கம்:இன்னமுதம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்கேதாரம்

தொண்டரஞ்சு களிறும் மடக்கிச் சுரும்பார்மலர்
இண்டைகட்டி வழிபாடு செய்யும் இடமென்பரால்
வண்டுபாட மயிலால மான்கன்று துள்ளவரிக்
கெண்டைபாயச் சுனைநீல மொட்டலருங் கேதாரமே.

“அடியார்கள், ஐந்துபுலன்களாகிய ஆண்யானைகளையும் அடக்கி, வண்டு மெய்க்கின்ற மலர்களால் பல்வேறு வகையான மலர் மாலைகளைக் கட்டி, இறைவனை வழிபாடு செய்கின்ற இடம் என்று சொல்லுவார்கள். (எதனை எனில்) வண்டுகள் பாட, மயில்கள் ஆட, மான் கன்றுகள் துள்ளி ஓட, வரிகளையுடைய கெண்டை மீன்கள் துள்ளிப் பாய்கின்ற சுனையிடத்து நீலோற்பல மலர்கள் மொட்டு விரிக்கின்ற கேதாரத்தையே ஆகும்.”

(தொண்டர்-அடியார்கள்; ஐந்து களிறும்- சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற புலன்களோடு கூடிய வாய்,கண், மெய்,செவி, மூக்கு ஆகிய ஐந்து பொறிகளாகிய யானைகள்; கரும்பு- வண்டுகள்; இண்டை- பல்வேறு வகைப்பட்ட மலர் மாலைகள்; வழிபாடு -பூசை)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/25&oldid=1550995" இலிருந்து மீள்விக்கப்பட்டது