பக்கம்:இன்னமுதம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதுரை

துரைக்குச் சென்ற ஞானசம்பந்தர் பிற சமயத்திலிருந்த, நின்ற சீர் நெடுமாறன் என்ற பாண்டியனைச் சைவ சமயத்துக்கு மீண்டும் வருமாறு செய்து அங்கேயே தங்கி ஆலவாய் அண்ணலை வணங்கி இருந்தார். அப்பொழுது அவருடைய தந்தையாராகிய சிவபாத இருதயர் பாண்டிநாடு சென்ற மகனைக் காண வேண்டும் என்ற கருத்தால் மதுரை வந்து சேர்ந்தார். தம்மை தேடிக் கொண்டு மதுரைக்கு வந்த தந்தையாரைப் பார்த்த பிள்ளையார் “சீர்காழியில் இறைவன் எவ்வாறு உள்ளான்?” என்று உள்ள கேட்கிறார்.

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணினல் லகதிக்கி யாதுமோர் குறைவிலைக்
கண்ணினல் லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணினல் லாளொடும் பெருந்தகை இருந்ததே.

“இவ்வுலகின்கண் வாழலாம்; சிந்தித்துப் பார்த்தால் அடுத்த உலகில் பெற வேண்டிய நல்ல கதிக்கும் யாதொரு விதமான குறையும் ஏற்படாது; கண்ணுக்கு இனிய நல்ல வளத்தோடு கூடிய கழுமலம் என்னும் சீர்காழிப் பதியின்கண் பெண்ணின் நல்லவளாகிய இறைவியுடன் பெருந்தகையாகிய சிவபிரான் நலமாக இருக்கின்றான் அல்லவா?”

(மண்ணில்- இப்பூவுலகத்து; வைகலும்-நாள்தோறும்; எண்ணின்-சிந்தித்துப் பார்த்தால்; நல்ல கதிக்கு- மோட்சத்துக்கு: கண்ணின் நல்லது உறும்- கண்ணுக்கினிய வளப்பத்தோடு கூடிய)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/27&oldid=1551178" இலிருந்து மீள்விக்கப்பட்டது