பக்கம்:இன்னமுதம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உரைக்குறிப்புகள்: அ. ச. ஞானசம்பந்தன் 51


பிழையுளன பொறுத்திடுவரென்றடியேன் பிழைத்தக்கால்
பழியதனைப் பாராதே படலமென்கண் மறைப்பித்தாய்

குழைவிரவு வடிகாதா! கோயில் உளாயோ? என்ன

உழையுடையான் உள்ளிருந்(து) உளோம்போகீர் என்றானே.

"நான் ஏதாவது பிழைகள் செய்தாலும் என்னுடைய தோழனாகிய இறைவன் பொறுத்துக் கொள்வான் என்ற நினைவில் அடியேன் தவறு செய்தால், என்னை தண்டிப்பதால் ஏற்படுகின்ற பழியைக் கூடப் பொருட்படுத்தாமல் என் கண் படலத்தை மறைப்பித்து விட்டாய். குழை பொருந்திய நீண்ட காதினை உடையவனே! "நீ கோயிலுக்கு உள் இருக்கின்றாயா?" என்று நான் கேட்க, மானை ஏந்திய அப்பெருமான் உள்ளேயிருந்தபடியே, 'உள்ளோம், போங்கள்' என்று சொல்லி விட்டானே.”

(பிழைத்தக்கால் - தவறு செய்தால்; படலம் என் கண் - என் கண் படலம், என் கண் பார்வை; குழை - ஆண்கள் காதில் அணியும் அணி; வடிகாதா - நீண்ட காதினை உடையவனே; உழை - மான்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/53&oldid=979801" இலிருந்து மீள்விக்கப்பட்டது