பக்கம்:இன்னொரு உரிமை.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102சு. சமுத்திரம்

கம்பீரத்தோடு காட்சியளித்த தன் உடம்பை குறுக்கியபடியே மகனை விடாது பார்த்தாள். அவன் இப்படிப் பேசியபிறகு அவள் எப்படிப் பேசுவது? பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பது எவ்வளவு சரியாப்போச்சு? பதினைந்து ஆண்டுக்கு முன்னாலேயே, ‘அந்த மனுசன்’ துள்ளத்துடிக்க ஒருவார காய்ச்சல்ல இருந்த இடம்தெரியாம கட்டமண்ணா போன பிறகும்... நண்டும் சிண்டுமாய் இருந்த இதுகளை எப்படில்லாம் வளர்த்தேன். பெரியவனை எப்படில்லாம் கஷ்டப்பட்டு படிக்க வச்சேன். இதோ, எதுவுமே நடக்காததுமாதிரி கல்லுளி மங்கியா பார்க்கிற இவளையும் படிக்க வைச்சேனே... பூமி பொய்யானபோது, கூலி வேலைக்குக்கூடப் போயிருக்கேனே... ‘அந்த மனுஷனை தான்’ கடைசிவரைக்கும் பார்க்க முடியலே. அவர் தந்த பிள்ளையளையாவது கடைசி காலத்திலே கண்குளிரப் பார்த்துட்டுப் போகலாம்முன்னு இருந்தால் இவன் கண்மண் தெரியாமல் பேசுறானே... தாலி அறுத்தவள் என்கிற இளக்காரத்திலே சொத்தைப் பறிச்சுடலாம்னு , பல பயலுவ வம்பு சண்டைக்கும், வரப்பு சண்டைக்கும் வந்தப்போ இந்தச் சொத்தை எப்படில்லாம் காப்பாத்தினேன். இப்ப அவங்கள்ளாம் மரியாதையாய், என்னைப் பார்க்கிற காலத்துலே, இவன் அவமரியாதையா பார்க்கிறானே... என் மன்னவன் உலாத்தின இந்த வீட்டை எப்படில்லாம் தினமும் கையெடுத்துக் கும்பிடுறேன். வெறும் மண்ணையும் சுவரையுமே நான் இப்படிப் பார்க்கும்போது, நான் இவன்களை எப்படிப் பார்த்து இருப்பேன். என் வயித்துலே மண்ண அள்ளிப் போட்டுட்டுப் போறேன்னு சொல்லுதானே! போவட்டும். பட்டாத்தான் தெரியும். அடியே மாரியம்மா, என்ன வார்த்தை பேச வச்சுட்டே!

திருமலையம்மா மகனை மவுனமாகப் பார்த்தாள். பிறகு தொழுவத்திற்குப் போய், கன்றுக்குட்டியின் அருகே சாய்ந்து கிடந்தாள். முத்துலிங்கம் இன்னும் கஞ்சி குடிக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/111&oldid=1368521" இலிருந்து மீள்விக்கப்பட்டது