பக்கம்:இன்னொரு உரிமை.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118சு. சமுத்திரம்

கேட்ட காட்டுப்புறா அங்கிருந்து பாய்ந்து கும்மாளம்மாவின் காலடியில் உட்கார்ந்தது. அவள் பூக்கரத் தடவலில் மெய் மறந்தபடியே மாமரத்திலிருந்த காட்டுப் புறாவை கண் சிமிட்டிப் பார்த்தது. பிறகு தனது கூட்டின்மேல் ஏறி உட்கார்ந்தது. எதிரே மரத்தில் உட்கார்ந்திருந்த புறாவை வா வா என்று அழைத்தது. காதல் சமிக்ஞை தொக்கி நிற்கும் வினோத ஒலியை எழுப்பியது.

அங்கே போகலாமா, வேண்டாமா என்பதுபோல், அந்தக் காட்டுப்புறா யோசித்தது. சுற்றுமுற்றும் பார்த்தது. அதற்கு எதுவுமே பிடிக்கவில்லை. கும்பலாக வந்த மாடுகள் ஒன்றையொன்று முட்டிக்கொண்டு நின்றன. பச்சையாக இருந்த செடியில் முளைத்திருந்த சப்பாத்திப் பூக்களைப் பார்த்துவிட்டு, சில மாடுகள் மிரண்டு ஓடின. ஒரு பூனிக் குருவியை ஒரு காகம் கிட்டத்தட்ட கொல்லப்போன சமயம், உடனே ஒரு பூனிக்குருவி பட்டாளமே அந்த காகத்தின்மீது மோதிக்கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் ஒரு மாட்டின் முதுகில் இரண்டு பக்கமும் கயிற்றைப்போட்டு அமுக்கிக் கீழே தள்ளுகிறார்கள். பிறகு அதன் முன்னங் கால்களையும், பின்னங் கால்களையும் கட்டிப்போடுகிறார்கள். யாரோ ஒரு மனிதன், ஒரு ஆணியையும், சிப்பி அளவுக்கான லாடங்களையும் கொண்டு அதன் காலில் அறைகிறான். காட்டுப் புறா கண்ணை மூடிக்கொண்டது. ஐயோ இது என்ன கொடுமை... இன்னொரு பக்கம் திரும்பிப் பார்க்கிறது. அங்கே கொல்லர் ஒருவர் எதையோ ஒன்றை அமுக்கி அமுக்கி ஒரு குழியில் தீப்பிழம்புகளை எழுப்புகிறார். இன்னொரு இடத்தில் மேட்டுப்பகுதியில் ஒரு குழாயை நாலைந்து பெண்கள் மாறி மாறி அடித்து யாரையோ வாய்க்கு வந்தபடி திட்டுகிறார்கள். இது போதாதென்று ஒரு நாய், புறாக் கூட்டின் இரும்பு வாய்களுக்குள் மூக்கைவிட்டு மோப்பம் பிடிக்கிறது. ஐயய்யோ ராத்திரி நிம்மதியா தூங்கமுடியாது போலிருக்கே. அந்த லுங்கிக்காரன் பார்வை வேற சரியில்லை. என்னை ஏன் ஏக்கமா பாக்குறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/127&oldid=1368915" இலிருந்து மீள்விக்கப்பட்டது