பக்கம்:இன்னொரு உரிமை.pdf/133

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124சு. சமுத்திரம்

“டில்லியிலிருந்து இப்போதுதான் வந்திருக்கீங்க, இல்லியா... டில்லியைப் பிடிக்கலன்னு... அந்த ‘லைப்’ பிடிச்ச ஹஸ்பண்டை நச்சரிச்சு டிரான்ஸ்பர் கேட்டு வரவழைச்சிட்டிங்க. இல்லியா? இப்போ அங்கு உங்களை அவரு நச்சரிக்கிறார். தில்லிக்குப் போகலாம் என்கிறார். அம் ஐ கரெக்ட் மேடம்!”

மிஸஸ் பாஸ்கரன் அவனே வியப்படையும்படி வியப்பால் பார்த்தாள். பிறகு வாயகல “ஒங்க மிஸஸ் எல்லாத்தையும் சொல்லிட்டு—தா...” என்றாள்.

“எடிட் பண்ணித்தான் சொல்லியிருப்பான்னு நினைச்சேன்! பட் டில்லி ‘லைப்’ அருமையான லைப்பாச்சே மேடம். அங்கே போனதும் நாம இன்டலெக்சுவலோ இல்லியோ... நமக்கே அறிவாளி என்கிற எண்ணம் வருமே! இங்கே ஜாதி உட்ஜாதி மாதிரி ஒரு வட்டத்துல சுற்றிச்சுற்றி வார நமக்கு அங்கே இந்த ஜாதி ஈர்ப்பு சக்திக்கு மீறிய ஆகாயத்தில் மிதக்குறதுமாதிரி ஒரு பீலிங் வருமே... சர்தார்ஜிகள், பெங்காலிகள், ஜாட்டுகள், சிந்திகள், மெட்ராஸ்கள் இப்படி எல்லாரையும் ஒரு சேரப் பார்த்து... ஒரு சேர வாழும்போது ஏதோ ஒருவித விவரிக்க முடியாத மோசமான பீலிங் வருமே... ஒங்களுக்கு வர்லியா மேடம்!”

‘மேடம்’ சிரித்துக்கொண்டே பதிலளித்தாள்.

“நீங்க சொல்றது சரிதான்... எனக்கும் டில்லி லைப் பிடிச்சது. ஆனால் வின்டர் ஒத்துக்கல. அதோட ஆகாயத்துல சுத்துனாலும், அடித்தளத்துக்கு வந்துதானே ஆகணும். இங்கேன்னா ஒரு ‘பிளாட்’ வாங்கி, ஏதாவது கட்டலாமில்லியா... பிரபஞ்சத்தை ரசிக்கனுமுன்னால்கூட, நாம நிக்கிறதுக்கு ஸ்பேஸ் இருக்கணுமில்லியா? ஒன்னுல நின்னுதானே, இன்னொன்ன பார்க்க முடியும்.”

“பரவாயில்லியே! நீங்க பிராக்டிக்கலாவும் பேசுறீங்க! பிலாஸபிக்கலாவும் பேசுறிங்க.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/133&oldid=1388268" இலிருந்து மீள்விக்கப்பட்டது