பக்கம்:இன்னொரு உரிமை.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெண்மைக்கு முதுமை இல்லை 5


கீழே குதித்து விழப்போவது போன்ற கண்கள்... அவர் அவளை நெருங்கும்போதெல்லாம், சுற்றுச் சூழலை, தலையைச் சுற்றிப் பார்த்து “வேண்டாம்... இப்போ வேண்டாம்” என்று மெல்ல முனங்கியபடியே, முகத்தை கழுத்தோடு சேர்த்து இரண்டு தோள்களுக்கும் மேல படும் படி தலையாட்டும் லாகவம் கடிகாரப் பெண்டுலம் மாதிரி.

பாட்டியை அந்த அழகுக் காலத்தில், இருத்தி வைத்து விட்டு, பிறகு இந்த இறுதிக் காலத்திற்குக் கொண்டு வந்த தாத்தாவிற்கு, இப்போதும் அவள் அழகாகவே தெரிந்தாள். முகம், கொட்டைப்பாக்கு மாதிரி சுருங்கிப்போனாலும், அந்த மூக்கு மட்டும் இன்னும் முகத்துக்கே மூக்குத்திபோல் மின்னியது. தாத்தாவுக்குத்தான்.

தாத்தா, கடந்த காலத்திற்குள் மூழ்கி, முத்துக்களையும், சொத்தைகளையும் கொண்டு வந்தார். முத்துக்கள் அவரை முறுவலிக்க வைத்தாலும், சொத்தைகள் அவரைத் துளாவித் துளாவி கேட்க வைத்தன.

“இப்போ நினைச்சாக் கூட சங்கடமா இருக்கு. ‘பாக்கி’ சில சமயம் நானும் ஒன்ன படாதபாடு படுத்தியிருக்கேன்.'”

“இல்ல... இல்லவே இல்ல... விரல் விட்டு சொல்லுங்க.”

“என்னப்பா மறந்துட்டியா... சிந்தாதிரிப் பேட்டையில பால்காரன் வீட்ல நாம ஒரு போர்ஷன்ல இருக்கப்போ, பெரிய பெண் வயித்துல இருந்தாள். மூணுமாசம். எங்கம்மா ஏதோ சொன்னத்துக்கு நீ திருப்பிக் கத்துனே. அம்மா என்னைக் கையாலாகாதவன்னு திட்டுனாள். உடனே பட்டுன்னு ஒன் கன்னத்துல... நான் நடந்துகிட்டதே சொல்றதுக்கே வெட்கமா இருக்கு!”

“நீங்களாவது என்ன அடிக்கறதாவது சிந்தாதிரிப் பேட்டையில இல்ல, மயிலாப்பூர்ல! நீங்க லேசா கைய தூக்குனீங்க... உடனே கன்னத்த நேரா நிமுத்துனேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/14&oldid=1369487" இலிருந்து மீள்விக்கப்பட்டது