பக்கம்:இன்னொரு உரிமை.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நிசமான பத்தினி163


வேப்பமரத்தடியில், ஏழெட்டு இளம் பெண்கள், மூன்று நடுத்தர வயதுப்பெண்கள் வட்டமாக உட்கார்ந்து, “நீ ஆயிரம் சொல்லு, நாகேஷ் மாதிரி வராது பிள்ள.” என்று ஒருத்தி சொல்ல, இன்னொருத்தி “நீ பழயகாலத்துக் கர்நாடவம்! முப்பது வயச தாண்டுணவ... ஒனக்கு சினிமாவப் பத்தி என்னழா தெரியும்” என்று எதிர் வழக்காட, இதரப் பெண்கள் அவர்களை உசுப்பிவிட்டு வேடிக்கை பார்ப்பது போல் சிரித்தார்கள். வாய்கள் என்னதான் பேசினாலும், கண்கள் எங்கேதான் பார்த்தாலும், நினைவுகள் டூரிங் தியேட்டர்களுக்குப் போனாலும், ஒவ்வொருத்தியின் கைகளும் தத்தம் மடியில் உள்ள வட்டமான தட்டில் இருந்து பழுத்துப்போன ஆலிலை போலிருந்த பீடி இலைகளை, கத்திரிக்கோலால் லாகவமாக, சதுரஞ் சதுரமாய் வெட்டுவதும், ஒவ்வொரு இலையையும் இடது கையில் வைத்து, தட்டில் குவிந்திருந்த பீடித்தூளை எடுத்து, இலையில் அளவோடு போட்டு, நளினமாக உருட்டி, தென்ன நாரால் கட்டி, ஊசியாகக் குவிந்த இடத்தைப் பிடித்துக்கொண்டே, உருளையாகத் திரண்ட பகுதியை மடித்து, பீடியைப் போலவே அமைந்த தேக்குக்குச்சியை வைத்து அழுத்தி, அனாயாசமாகக் கீழே போட்டுவிட்டு, மீண்டும் இலையை எடுப்பதும், மடிப்பதுமாக இருந்தார்கள்.

சீனியம்மாவைப் பார்த்ததும், ஒரு பதினாறு வயதுக் காரி, “இந்தா சீனியக்கா வந்துட்டா! இவாகிட்ட கேட்டா தெரிஞ்சிட்டுப்போவுது. எக்கா கமலஹாசன் நடிப்பு நல்லா இருக்குமா, இல்ல ரஜனிகாந்த் நடிப்பா சொல்லுக்கா” என்றாள். உடனே “ஆமாம் அவதான் பொருத்தமாச் சொல்லுவா” என்று இன்னொருத்தி சொல்லிவிட்டுச் சிரித்தாள். உடனே எல்லாப் பெண்களும் சிரித்தார்கள்.

சீனியம்மாவுக்கு வெட்கமாகிவிட்டது. அந்தப் பெண்கள், சினிமா கினிமா என்று நாலுந் தெரியாத தன் கர்நாடகத்தைச் சுட்டிக்காட்டுகிறார்கள் என்பதைப் புரிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/172&oldid=1368844" இலிருந்து மீள்விக்கப்பட்டது