பக்கம்:இன்னொரு உரிமை.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நிசமான பத்தினி165


ஆனால் சாயங்காலம் பீடிப் பெண்கள் புறப்பட்டபோது சீனியம்மையும் அழுக்காய் இருந்த தன் புடவையை உட்பக்கமாக மாற்றி மடித்து உடுத்திக்கொண்டு, தலையில் இரண்டு தங்கரளிப் பூக்களை வைத்துக்கொண்டு தயாராக இருந்தாள். அவள் முதலாவது ஆட்டத்திற்குப் போவதால், மத்தியானம் வெட்டிய புல்லில் கன்றுக்குட்டி ‘மேட்னி’ ஆட்டம் போட்டது.

அந்தக் குக்கிராமத்தை அடுத்து, இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த டூரிங் தியேட்டரை நோக்கி அந்தப் பெண்கள் நடைபோட்டார்கள். சினிமா நடிக―நடிகைகளில் இருந்து, பீடிக்கடையில் உள்ள கணக்கப் பிள்ளை வரை அலசிக்கொண்டே போனார்கள். சீனியம்மைக்குக் கூச்சமாக இருந்தது. மற்றப் பெண்கள் ‘முன் கொசுவம்’ வைத்த நைலக்ஸ் புடவைகள் கட்டியிருந்த போது, தான்மட்டும் பின் கொசுவம் வைத்து அச்சடிப் புடவையைக் கட்டியிருப்பதற்காகச் சிறிது வெட்கப்பட்டவள் போல் காலைத் தேய்த்துத் தேய்த்து நடந்தாள். அவளுக்கும் முன் கொசுவம் வைத்துக் கட்ட ஆசைதான். இருந்தாலும் கூச்சம். அவர்கள் கேலி செய்வார்கள் என்கிற பயம். அந்தப் பெண்கள் முகத்திற்குப் பவுடர் போட்டிருப்பதைப் பார்த்ததும், அவள் முகம் பவுடர் மாதிரி வெளுத்தது. அவர்கள் காலில் கலர் செருப்புக்கள். இவள் காலில் செருப்பைப் போன்ற காய்ப்புக்கள். ஒவ்வொருத்தியும் இடுப்பின் ஒரு பக்கத்தில் ஒரு கைக்குட்டையையும், இன்னொரு பக்கத்தில் ஒரு சின்ன மணிபர்ஸையும் வைத்திருந்தார்கள். நடந்துகொண்டே அவர்கள் நடந்து முடிந்த சினிமாக்களை விமரிசனம் செய்தபோது, சீனியம்மையால் தடக்க முடியவில்லை. நொண்டினாள்.

‘பெஞ்ச்’ டிக்கெட் எடுத்தார்கள். பீடிக்கடைப் பையன்களில் சிலர் அவர்களின் வரவால் ஆச்சரியப்படாமலும், அதேசமயம் ஆனந்தப்பட்டும், ‘ஏன் இவ்வளவு லேட்டு...’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/174&oldid=1368866" இலிருந்து மீள்விக்கப்பட்டது