பக்கம்:இன்னொரு உரிமை.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204  சு. சமுத்திரம்

 வருபவள் கூட உள்ளே போய்விடுவாள். அவ்வளவு அடக்கம், பின்வாசல் இருந்தது. அவள் 'அடக்கத்தை' பெர்மனண்டாக்கியது. இவர்களுக்கு தலைவலி, வயிற்றுவலி வந்தால்... உயிர்போவதுபோல் முதுமைக் காட்டேரி எட்டிப்பார்த்தால் அப்போதும் அடக்கத்தை விட்டுவிட மாட்டாள். டாக்டர் பார்க்க வேண்டிய விவகாரத்தை இவள் பார்க்கலாமா... அப்புறம் ஏதாவது ஏற்பட்டு இவர்கள் இறந்துவிட்டால்... டாக்டர் வருவாரா?

எதற்கு? பழைய காலத்துக் கட்டைகள் நாட்டு வைத்தியத்தில் பழக்கப்பட்டவை. சுக்கு, மிளகு, கேட்கும்போது கொடுப்பாள்- மகள் மூலமாக; மகன் மூலமாக. அவள் வருவாளா? வரலாமா? பெரியவர்கள் முன்னால் ஒரு சின்னவள் அடக்க ஒடுக்கம் இல்லாமல் வரத்தான் முடியுமா?

கிழவரும், கிழவியும் தங்களைச் செத்ததாக நினைத்துச் செயல்பட்ட மருமகளால் ஆரம்பக் காலத்தில் துணுக்குற்றார்கள். அவர் அவர்கள் அங்கே இல்லாததுபோல் செயல்பட்டாலும் அவர்களால் அவள் இல்லாததுபோல் நினைக்க முடியவில்லையே... ஆரம்ப காலத்தில் இவர்களும் வீட்டுக்குள் போய் எல்லோருடனும் சேர்ந்து டைனிங் 'டேபிளில்' சாப்பிட்டார்கள். ஒரு நாள் மகன், "ஒங்களுக்கு ஏன் சிரமம்? தள்ளாத வயசுல.... ஏன் கஷ்டப்பட்டு நடக்கணும்... சாப்பாடு... இனிமேல் அங்கே வந்திடும்" என்று சொன்னபோது மருமகள் ஒரு மர்மப் புன்னகையை மலரவிட்டாள். அப்புறம் சாப்பாடு லேட்டாக வரத் துவங்கியது. உள்ளே உள்ள டைனிங் டேபிளில் உட்கார்ந் திருப்பவர்கள், அதைக் காலி செய்த அரைமணி நேரத்திற்குப் பிறகே இவர்களின் காலி வயிறு நிரம்பும்.

ஆனால் இன்று போலில்லை. இரவு மணி பத்துக்கு மேலாகிவிட்டது. இன்னும் அவர்கள் சாப்பிட்டது மாதிரி தெரியவில்லை. சாப்பிடும்போது இப்படி பெரிய சத்தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/213&oldid=1369023" இலிருந்து மீள்விக்கப்பட்டது