பக்கம்:இன்னொரு உரிமை.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22 சு. சமுத்திரம்

கோழியுடன் சென்ற குஞ்சுகளைக் கோமதி வெறித்துப் பார்த்தபோது திடீரென்று, தொட்டிலில் தூக்கம் கலைந்த குழந்தை கத்தியதில், கோமதி தூக்கத்தைக் கலைத்துக் கொண்டு எழுந்தாள். அவசரத்தில் கைகளை ஊன்றாமலே எழுந்ததால் சிறிது தடுமாறி, தள்ளாடும் கிழவிபோல் நடந்து பிறகு ஒரே தாவாகத் தாவி, குழந்தையை எடுத்தாள். மூன்று மாதக் குழந்தை. அன்னை திடீரென்று இருபத்திரண்டு வயது வாழ்க்கை முற்றுப்புள்ளியாகி விட்டதோ என்று மறுகியபோது, அந்தப் புள்ளியைக் கோடு கிழித்து ‘கமாவா’ ஆக்கியதுபோல், அழுத பிள்ளை அம்மாவைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டியது.

குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்த கோமதிக்குத் தாய்மையின் பெருமிதத்தைவிட, தாய்ப் பாசத்தின் அடர்த்தி அதிகமாகிறது. நானும்... இப்படித் தானே அம்மாவிடம் பால் குடித்திருப்பேன். இவள், ‘என்னை விடமாட்டேன்’ என்பதுபோல், என் விலா எலும்பில் ஒரு கையையும் தோளில் ஒரு கையையும் வைத்துக்கொண்டு அழுந்தப் பிடிக்கிறாளே. அப்படித் தானே நானும் பிடித்திருப்பேன்?

திடீரென்று கோமதி இன்பதுன்ப எல்லைப் பரப்பைத் தாண்டிய பிரத்தியட்சத்தின் ஈர்ப்புச் சக்திக்கு அப்பாற் பட்ட ஒரு சுகமான கற்பனைப் போதையில் மிதந்தாள். குழந்தையைத் தன்னைப்போலவும், தன்னைத் தன் தாயைப் போலவும் கற்பனை செய்து பார்த்தாள். தானே தன்னைப் பெற்றுக்கொண்டாள். தானே தன்னைப் பிறப்பித்தவளானாள். பிறகு, பெற்றவளாகவும், பிறப்பித்தவளாகவும் கற்பித்துக்கொண்ட ‘துவைதம்’ போய் ஏதோ ஒருவித ஒருமை உணர்வில் குழந்தைக்குள் தாயையும் தாய்க்குள்ளே குழந்தையையும் காணும் ‘அத்வைதத்தில்’ அவள் இரண்டறக் கலந்தபோது-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/31&oldid=1369565" இலிருந்து மீள்விக்கப்பட்டது