பக்கம்:இன்னொரு உரிமை.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26 சு.சமுத்திரம்

கோமதி தள்ளாடிக்கொண்டே கீழே விழப் போனபோது அண்ணன் அவளைத் தாங்கிப் பிடித்து, டாக்ஸிக்கு அருகே நகர்த்திக்கொண்டே யாராவது உள்ளே போய்க் குழந்தையை எடுத்துக்கிட்டு வாங்க; ஒரு ஆளு வீட்ல இருங்க" என்றார்.

மெளனமாக நின்ற கூட்டத்தின் சார்பில் ஒருத்தி அவருக்குப் பதிலளித்தாள். “எந்த வீட்டப் பார்த்தாலும் இந்த வீட்டப் பார்த்துக்க முடியாது. நாங்க எதையாவது திருடிக்கிட்டோமுன்னு பழி போடுவாங்க! மருமகளை நம்புறது மாதிரி வீட்டைத் திறந்து போடுறது... நம்பாதது மாதிரி திறவு கோலக் கொண்டு போறது... இப்படி நடக்கிற பொம்பிளைகிட்ட நாங்க மாட்டிக்கிட்டால், அவ்வளவு தான்.”

அண்ணன் என்ன செய்வதென்று புரியாமல், கூட்டத்தை அதிசயமாகவும், அருவருப்பாகவும் பார்த்தார். வீட்டை இப்படியே போட்டுவிட்டுப் போனால் அந்த அம்மா வீட்டில் இருந்த நகைகளைத் தங்கச்சியோட உதவியுடன் நானே எடுத்துக்கொண்டு போனதாய்ச் சொல்லலாம். ஒரு தடவை எனக்குப் பெண் பார்ப்பதற்காகத் தங்கையைக் கூட்டிக் கொண்டுபோக வந்தபோது, ‘அவளை அனுப்பமுடியாது, கூட்டிக்கிட்டுப் போவதாய் இருந்தால் ஒரேயடியாகக் கூட்டிட்டுப் போகலாம்’ என்று சொன்ன மகாராணி. பக்குவமாய்த்தான் நடந்துக்கணும் என்ன செய்யலாம்.

யோசித்துக்கொண்டிருந்த அண்ணனைக் கோமதி உற்றுப் பார்த்துவிட்டு பிறகு அவர் மோவாயைப் பிடித்துக் கொண்டே, “நீ இங்க இரு அண்ணா! நான் போய் அம்மா வைப் பார்த்துட்டு ஓடி வந்துடறேன். நான் போறேன் அண்ணா! என்னை அம்மாகிட்டே போக விடு அண்ணா!” என்று புலம்பினாள்.

அவள்மீது பரிதாபம் கொண்ட ஒருசில பெண்கள் மாமியார்க்காரியை அசிங்கமாகத் திட்டினார்கள்! உடனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/35&oldid=1369591" இலிருந்து மீள்விக்கப்பட்டது