பக்கம்:இன்னொரு உரிமை.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50 சு. சமுத்திரம்

வும், மறுப்பவன் போலவும், தொடையில் கடித்துக்கொண்ருந்த கட்டெறும்பின் கடிமானம் தெரியாமல் கட்டையாகக் கிடந்தான். சிதம்பரம் கீழே விழுந்த காலைத் தூக்கி, பெஞ்சியில் போட்டுவிட்டு, கட்டெறும்பை அந்தச் சிறுவனின் தொடையில் வைத்தே தேய்த்துவிட்டு, தட்டிக்கதவை திறந்தான். ஹரிக்கேன் விளக்கைப் பற்ற வைத்தான். தொலைவில் கம்பீரமாகத் தெரிந்த மலையுச்சிக் கோவிலில் ஆலய மணி அடிபட்டுக் கொண்டிருந்தது.

பாய்லரின் அடிப்பாகத்தைத் தட்டிவிட்டு, கரிப்படிமங்களை துடைத்துவிட்டு, ‘ஸ்டவ்’ அடுப்பைப் பற்றவைத்தான். பாய்லரில் கரியைப் போட்டுவிட்டு, அதன் மேல்வாய் வழியாக, சிமெண்ட் தொட்டியில் இருந்த தண்ணிரை, ‘டப்பு’ மூலம் மொண்டு மொண்டு ஊற்றினான். ஸ்டவ்வில், இருபக்கமும் இரும்புக் கடுக்கன் போட்ட ‘கடாயை’ தூக்கி வைத்தான். அது சுட்டது. கடலையெண்ணெயை ஊற்றிவிட்டு, சிறிது நேரத்திற்குப் பின்பு, இரவில் அரைக்கப்பட்டிருந்த மாவை பிடித்துப்போட, அவை மசால் வடைகளாக எண்ணெய்யில் மிதந்தன. தோசை சுடவேண்டும். தம்பியைப் பார்த்தான். அவன் படுத்துக்கிடந்த விதம் அவனுக்குக் கலக்கத்தைக் கொடுத்தது உண்மைதான். பயந்துபோனவன்போல், தம்பியின் அருகே போய், மூக்குப் பக்கத்தில், நான்கு விரல்களை சேர்த்தாற்போல் அடுக்கி, நேராகக் கொண்டு போனான். மூச்சு வந்துகொண்டுதான் இருந்தது.

இதற்குள் ஊருக்குள் அரவம் கேட்டது. சிலர் நடந்து வரும் சத்தமும் கேட்டது. முதலில் பால்காரர் வந்தார். கேனில் இருந்த பாலை அளந்து கொடுத்துவிட்டு, ‘டீக்காக’ காத்திருந்தார். துரங்கிக்கொண்டிருந்த பையன், ‘மரித் தெழுந்தவன் போல்’ எழுந்து, நேராக ஸ்டவ் அருகே தோசைமாவுடன் வந்தான். அதிகப்படியாகத் தூங்கிவிட்ட குற்றவுணர்வில், அவன் ‘ஒண்ணுக்குப்’ போவதைக்கூட கட்டுப்படுத்திக் கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/59&oldid=1388401" இலிருந்து மீள்விக்கப்பட்டது