பக்கம்:இன்னொரு உரிமை.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெங்களூர் தெரஸா 7 3


இடுப்போடு இணைத்துக்கொண்டான். இருபது வயது கொண்ட ஒருத்தி அம்மாவின் கையைப் பிடித்தபடி கதறினாள். இன்னொரு சிறுமி கீழே உட்கார்ந்து கட்டில் காலில் முகத்தை வைத்து மோதினாள். ஒரே ஒருத்தி மட்டும் மஞ்சள் கயிறு போட்டவள்-நிதானத்தை இழக்காமலே அழுதுகொண்டிருந்தாள். "அம்மா அம்மா" என்ற ஆண் பெண் கோரஸ் ஒலி பாசத்தின் பரிமாணங்களைக் காட்டும் வெளிப்பாடுகள். மொத்தத்தில் அந்த அறையே வாசலென்ற வாய்மூலம் ஓலமிடுவது போல் தோன்றியது.

எந்நாளும் இல்லாத இந்நாளில் ஏற்பட்ட சத்தம் கேட்டு டாக்டர்கள், நர்ஸ்கள் ஓடிவந்தார்கள், ஒரு ஏழைக் குடும்பத்தின் பாசப்பிடிப்பில் சிறிதுநேரம் கட்டுண்டு நின்றார்கள். பின்னர் அழுதவர்களை அதட்டினார்கள். அருகருகே இருந்த பணக்கார நோயாளிகள் கூடத் தட்டுத் தடுமாறி அங்கே வந்து ஆச்சரியமாகப் பார்த்தார்கள். இந்த நர்லிங்ஹோமில் எவராவது இறக்கும்போதுகூட இப்படிப் பட்ட அழுகை ஏற்பட்டதில்லை. பணம் ஏறஏறப் பாசம் குறையுமோ, நாகரீகம் படப்பட பாசமும் பட்டுப் போகுமோ.

லிங்கையா ஒடுங்கிப்போய், மூலையோடு மூலையாய் நின்றான். தெரேஸாவின் பையன்களைப் பார்க்கப் பார்க்க அவனுக்குப் பயமெடுத்தது. அம்மாவைப் பார்த்தே இந்த அழுகை அழுதவர்கள் அவனைச் சும்மாவா விடப் போகிறார்கள்?

அவன் எதிர்பார்த்ததுபோலவே, தெரேளாவின் மூத்த மகன் அம்மாவின் தலைமாட்டில் உட்கார்ந்தபடியே லிங்கையாவைச் சூடாகப் பார்த்தான். பிறகு, "நீங்கதான் டிரைவரா?" என்றான். லிங்கையா பட்டும் படாமலும் தலையாட்டியபோது, இன்னொருத்தனும் அந்தப் பெண்களும், அவனை ஒட்டுமொத்தமாகப் பார்த்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/82&oldid=1369060" இலிருந்து மீள்விக்கப்பட்டது