பக்கம்:இன்ப இலக்கியம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8. நன்றன்று!

கல்லருவி வான விற்போலப் பாய்ந்திசைக்கும், கழையின் நுனிதாழ்த்தி மழைக்களிறு பிடியூட்டும், குலைவாழைக் கச்சல் கொல்புலியின் கால்போல் மலைச்சாரல் எங்கும் வளரும் திருநாடா!

பனிபடர்ந்த நீள்குன்றம், பாட்டிசைக்கும் ஓடை, கனிமொழியாள், பசுங்கிள்ளை என் தலைவி தேடி இனி இரவில் நீவருதல் நன்றன்று! வந்தால், தனிப்பட்ட காளையெனக் கட்டக்கயி றெடுப்பார்!

இன்னமுது, புரட்சிக்கவி, இனியபழம் பாடல், மென்னடையாள், விடிவானம் என்தலைவி தேடி மின்னிருளில் நீவருதல் நன்றன்று! வந்தால், செந்நெல்மேய் எருமையெனத் தேடிப்பார்ப் பார்கள்:

கோட்டைப்பொன், மரமல்லி, குளிர்நீலப் பொய்கை, தீட்டாத ஒவியமாம் என் தலைவி தேடித் தோட்டத்துப் புறம்வருதல் நன்றன்று! வந்தால், காட்டுநரி வந்ததெனக் கதவைத்திறப் பார்கள்!

வான்பூத்த வெண்ணிலவு, வயல்பூத்த நீலம், தேன்பூத்த சொல்லாள் என் தலைவி தேடிக் கானாற்றைக் கடந்துவரல் நன்றன்று வந்தால், மான்திருடும் கள்வனென வளைத்துக்கொள் வார்கள்!