பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/110

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

இன்ப

ஜீவகாருண்யம் பற்றிப் பேசுவது பயன் தராது என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்களே! மன்னியுங்கள் பாதுகாவலரே! நீங்கள், மன்னரையோ அல்லது இந்த நாட்டு மக்களையோ பாதுகாக்கத் தேவையில்லை என்று நானோ, அன்றி வேறு எவரோ கூற முடியுமா? கூறினாலும் ஏற்பீர்களா? ஏற்க மாட்டீர்கள்...ஏற்கவும் கூடாது. ஏன்? அது உங்கள் கடமை. உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பு அது. விக்ரமரே, நான் ஒரு மருத்துவன்; அறிவின் துணைகொண்டு, ஆக்கச் சக்திகளை உண்டாக்க வேண்டும் என்ற பேராசை காரணமாகச் சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறேன்! நிறுத்திவிடுங்கள் என்று நீங்கள் கூறினாலும் என்னால் அது முடியுமா? நிறுத்தலாமா? நான் மேற்கொண்ட கடைமையிலிருந்து வழுவியதாக அது ஆகிவிடாதா? பாதுகாவலரே! அறிவின் துணையால் கண்டுபிடிக்கப்பட்டுவிட்ட ஒரு பொருள் அழிவுச் சக்திக்குக்கூட பயன்படுகிறது என்பதற்காக, அழிவுக்கு ஆக்கம் தர வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்களா? நான், எவ்வளவோ பச்சிலைகளைக் கசக்கிப் பிழிந்து, எத்தனையோ, மூலப் பொருள்களை உடன் சேர்த்து பல்வேறு பட்ட கலவைகளின் மூலம் கண்டுபிடித்ததுதான் அந்த நாசப்பொடி! சிந்தித்துப் பாருங்கள்! பழைய பச்சிலை, இப்போது நாசப்பொடி! பச்சிலை இயற்கைப்பொருள். நாசப்பொடி, செயற்கைப்பொருள். நாசப்பொடியை உண்டாக்க முடிந்த என்னால், அதன் மூலப் பொருளான பழைய பச்சிலையை மீண்டும் உண்டாக்க முடியுமா? குடிசைத் தொழிலாக நம் மக்கள், கூடை செய்தல், முறம் செய்தல் போன்ற தொழில்களை மேற்கொண்டிருக்கிறார்கள். அந்தத் தொழிலுக்கு மூலப்பொருள் மூங்கில் என்றறிவீர்கள்! மூங்கிலாக இருக்கும் கூடையையும், முறத்தையும், மீண்டும் மூங்கிலாக்க முடியுமா? மூங்கில் இயற்கை! கூடை செயற்கை! அப்படித்தான் தளபதியாரே, நாசப்பொடியைப் பயன்படுத்தி நாசத்தை உண்டாக்கி விடலாம்! பல்லாயிரக் கணக்கான உயிர்களை வதைக்கலாம்! ஆனால், அதையே பயன்படுத்தி நாசத்திற்கு முன்பிருந்த இயற்கை நிலையைத் தோற்றுவிக்க முடியாது! எனவே, அறிவின் கண்டுபிடிப்பை ஆக்கச் சக்திக்குத்தான்