பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி

119

தள: உங்கள் சமாதானம் எனக்குத் தேவையில்லை. உம் ஓலையை நம்பி எல்லை வரையில் இழுத்துக் கொண்டு வந்திருக்கிறேனே. இந்த வீரர்களை-நான்; நான் ஒரு முட்டாள்!

கார்: (நடுக்கத்துடன்) தளபதியார்...

தள: பேசாதீர்! கண் குளிரப் பார்க்கிறேனே! விழிகளைத் திறந்து வியப்போடு பார்க்கும்படிக் கூறினீரே...உம் சதியின் வடிவத்தைப் பார்க்கிறேன் இப்போது வியந்தபடி!

[என்று அவருக்கு அருகில் வந்து நின்று]

கார்மேகம்! எப்படி உமக்கு இந்தத் துணிவு பிறந்தது! நாடாளும் மன்னனையும், படைத் தலைவரையுமே ஏமாற்றுகின்ற அளவுக்கு இந்தத் துணிவைத் தந்தது யார்?

கார்: ...

தள: பேச முடியவில்லையா? சதி வெளிப்பட்டு விட்டதே என்று பேச விரும்பவில்லையா? கார்மேகம்! நீர் திருநாட்டிடம் கைக்கூலி பெற்றுக் கொண்டு, இந்தக் காரியத்தை செய்யத் துணிந்தீர்!

கார்: இல்லை, இல்லை! நான் துரோகம் செய்யவில்லை; துரோகம் செய்யப்பட்டிருக்கிறேன்!

தள: யாரை நம்பச் சொல்கிறீர் இப்படி? நான் நம்ப வேண்டுமா? நச்சுப்பொடி—திமிரடக்கப் போகும் தினவுப் பொடி இது என்று என்னை நம்பச் சொல்கிறீரா... துரோகி; உன்னிடம் பேசிக் கொண்டிருப்பதே பாவம்! இவ்வளவு பயங்கரமான பாதகத்தைச் செய்யத் துணிந்தாயே! உன்னை நம்பி, படையெடுத்து வந்திருக்கிறேனே கார்மேகம்! பாதி வீரர்களைக்கூட அழைத்து வராமல், உன் ஓலையை நம்பிக் கொண்டு வந்திருக்கிறேனே கார்மேகம்... இன்னமும் நம்ப வேண்டுமா? நாசகாலனே! நம்பியதுபோதும்; நாசமானது போதும்! உன்னை உயிரோடு விட்டுவைக்கக் கூடாது!...

கார்: தயவு செய்து நான் சொல்வதை...