பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

இன்ப

விக்ர: தாயகத்தின் தன்மானம் காத்த மாவீரர் சிலருக்கு மன்னா, தங்கள் திருக்கரத்தால் வீரப் பதக்கங்களைத் தரக் கோருகிறேன்.

குமார: மகிழ்ச்சி பாதுகாவலரே!

[பணியாள் ஒருவன் ஒரு ஓலைச் சுருளைப் பிரித்துப் படிக்கிறான். ஒவ்வொரு பெயராகப் படிக்கும்போது, பல்வேறு வயது வேறுபட்ட வீரர்கள் மன்னன்முன் வந்து மண்டியிட்டு வணங்கி, பதக்கங்களைப் பெற்றுச்செல்கின்றனர். கடைசியாக குணாளன் என்ற பெயர் படிக்கப்படுகிறது. கட்டிளம்காளை ஒருவன், கம்பீர நடை நடந்து, அனைவரையும் புன்னகையால் மகிழ்வித்தவண்ணம் வந்து நின்று, மன்னனை முதலிலும், பாதுகாவலனை அடுத்தும், அவையினரை அப்புறமும் வணங்கி நிற்கிறான். அரசன் குணாளனுக்கும் ஒரு பதக்கம் தருகிறார். அந்தச் சமயத்தில் அவையினர் மீண்டும் கரவொலி எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் செய்கின்றனர்.]

விக்ர: மன்னா! வெற்றி விழா தொடர்ந்து நடைபெற தங்கள் உத்திரவு...

குமார: ஆம்! நாடெங்கும் நடைபெறட்டும்! நாற்பது நாட்கள் நடைபெறட்டும்.

[காவலன் கட்டளையிட முரசு ஒலிக்கிறது; அவை கலைகிறது.]

காட்சி—2

[மருத்துவர் அறிவானந்தர் சில பச்சிலை மூலிகைகளைப் பிழிந்தெடுத்து வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார். அவரது மகள் திருமதி ஏதோ ஒரு பச்சிலையை எடுத்துக் கொண்டுவந்து,]