பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி

121

குணா: உண்மைதான் மணிவண்ணா! இது பற்றி நானும் நினைத்தேன். ஆனால், நாடு தவிர்க்க முடியாத தொரு பேரபாயத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் போது தத்துவங்களைப் பேசிக் கொண்டிருக்கிறார் அப்பா!

திரு: (குறுக்கிட்டு) அண்ணா! மன்னரே கூட மன்றாடினாராம்! அப்பாவின் குறிக்கோள் எவ்வளவுதான் உயர்ந்ததாக இருந்தாலும், அதற்கும் நேரம் காலம் இல்லையா? ஆராய்ச்சிக்காகச் செலவிட்ட பொக்கிஷத்தைப் படைப் பெருக்கத்துக்குச் செலவிட்டிருந்தால் அப்பாவின் தயவில்லாமலேயே, திருநாடு, மல்ல நாட்டை வெற்றி கொள்ளாதா?

மணி: உங்கள் பேச்சு எனக்கு ஆத்திரத்தை ஊட்டுகிறது. மல்ல நாடு பகை நாடுதான். அது அழிக்கப்படத்தான் வேண்டும். ஒப்புக் கொள்கிறேன்—நானும் மல்ல நாட்டைச் சேர்ந்தவன் என்பதையும் ஒருபுறம் நினைவில் வைத்துக் கொண்டு. ஆனால் குணாளா, உங்கள் திருநாட்டு மக்களைப் போல் நன்றி கொல்வாரை, என் நாட்டில் கண்டதில்லை. காணவும் முடியாது. ஏழை எளியவர், உடையார் கிடையார் என்ற பேதங்களின்றி மருத்துவத்தின் மூலமே எவ்வளவு சேவை செய்திருக்கிறார் உங்கள் தந்தை! ஒரு கணம் எண்ணிப் பார்த்தார்களா? துரோகி என்றும், ஒழிக என்றும் எத்துணை சீக்கிரம் குரல் எழுப்பிவிட்டார்கள். அறிவானந்தர் என்ற அறிவின் தெய்வத்துக்குத் துரோகம் இழைப்பதல்லவா இது? இந்த நாட்டு மக்கள் வாழ வேண்டுமா? இவர்களுக்கு வறுமையைப் போக்கி வளத்தைக் கூட்டவேண்டுமா?

குணா: உன் உணர்ச்சி எனக்குப் புரிகிறது மணிவண்ணா! நாட்டு மக்களுக்கு முழுமையாக எந்த ஒன்றையும் எந்தக் காலத்திலும் புரிய வைத்துவிட முடியாது. ஆனால், அவர்களுடைய கொந்தளிக்கும் உணர்ச்சிக்கு நாமும் கொஞ்சம் மதிப்பளிக்கத்தான் வேண்டும்!படையெடுப்புக் காரணமாக நாடு, பேரபாயத்திலிருக்கும்போது கொள்கைகள் என்றும், இலட்சியங்களென்றும் கூறிக்கொண்டு, நாட்டுக்கெதிராக இயங்குவதை எவரும் அனுமதிக்க மாட்டார்கள்; அனுமதிக்க-