பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/124

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

இன்ப

குணா: மணிவண்ணா! காரணம் காட்டி உன்னைத் 'துரோகி! வஞ்சகன்!' என்று தூற்றும்போது, உன்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையல்லவா! பொருந்துகின்ற காரணங்களைக் கூறும்போது உன்னால் மறுக்கவும் முடியவில்லையல்லவா! அப்படித்தான் நானும் பொறுக்க முடியாமல் தவித்தேன்! மறுக்க முடியாமல் மனம் குழம்பினேன் நாட்டு நிலையைக் கூறி, உதவி கோரும்போது, அப்பா மறுத்தது கேட்டு மக்கள், 'துரோகி! வஞ்சகன்! தூர்த்தன்! தூக்கிலிட வேண்டும்! வாளால் வெட்ட வேண்டும்' என்று குரல் ஒலிக்கும்போது என்னால் பேசமுடியவில்லை மணிவண்ணா, பேச முடியவில்லை! நீ துரோகியாகவில்லை-துரோகம் புரியமாட்டாய் என்று இப்போதும் என்னால் நம்ப முடிகிறது. ஆனால் அப்பா, துரோகியல்ல, வஞ்சகரல்ல என்று மக்கள் நம்பமாட்டார்களே!

திரு: நாசப் பொடியை பாதுகாவலரிடம் ஒப்படைத்து விடுவோம்! போரிலிருந்து நாடு மீளட்டும்; அப்போது தானாக நம்பிவிடுவார்கள் அண்ணா!

குணா: நானும் அதைத்தான் நினைக்கிறேன் திருமதி!

மணி: குணாளா! இப்போது நீ என்னைத் துரோகி என்று கூறுவதைத் தாங்கிக் கொள்ள முடியும்! ஆனால், நாசப் பொடியைக் கொடுத்து விடுவோம் என்பதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை குணாளா! நான் இலட்சியத்துக்கு அடிமையாகி இருக்கிறேனே!

குணா: நாம் கொடுக்காவிட்டால்கூட, விக்ரமன் இங்கு வந்து கொண்டுபோய் விடக்கூடும் என்று நீதானே சற்று முன் கூறினாய்! நம் அனைவரையுமே கைது செய்யும் எண்ணம் விக்ரமனுக்கு ஏற்பட்டு விடலாம் என்றாயே, மணிவண்ணா!

மணி: ஆமாம்! நாம் அனைவரும் ஆராய்ச்சிக் குறிப்புக்களுடனும், நாசப் பொடி–தடுப்புப் பொடி–தீப்பொருள் முதலியவைகளுடனும் தலைமறைவாகிவிட வேண்டும்.