பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/125

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி

125

குணா: உண்மையற்ற முறையில் அப்பா ஒருவர் துரோகியாக்கப்பட்டிருப்பது போதாதென்று, அந்தப் பெயரின் கீழ் நம் பெயரும் எழுதிக் கொள்ளப்பட வேண்டும் என்று கூறுகிறாய்.

திரு: அண்ணா பேசிக் கொண்டே வீணாகப் பொழுதைப் போக்கிக் கொண்டு இருக்கிறோம்

குணா: கருத்து வேறுபாடுகளை பேசிப் பேசித்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும். திருமதி! அடிதடியில் இறங்கி முடிவு காண்பது முட்டாள் தனமானது. அறிவுக்குப் பொருந்தாததுமாகும்.

மணி: குணாளா! உடல் பலம் கொண்டு நீ என்னைத் தாக்கினால்கூட, அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியும். மன பலத்தால், சொற்கூட்டத்தால் தாக்கப்படுவதை தாங்கிக் கொள்ள முடியாதவன் நான். இலட்சியம் காக்கப்பட வேண்டும் என்பதுதான் என் விருப்பம்; வேண்டுகோள்; நான் வருகிறேன்.

[மணிவண்ணன் புறப்படுகிறான்.]

திரு: நில்லுங்கள்! எங்கே புறப்பட்டுவிட்டீர்கள்?

குணா: மணிவண்ணா! திருமதி உன் உடைமை! ஒருவித சடங்கின் மூலம் இருவரும் இன்னமும் இணைக்கப்படவில்லையே தவிர, உள்ளத்தால், உணர்வால் இணைந்திருக்கிறீர்கள். உன் உடைமையை உன்னோடு கொண்டு போ! காலம் இணைத்து வைக்கும் வரையில், உன்னிடமே பாதுகாப்பாக இருக்கட்டும்.

மணி: குணாளா! அறிவானந்தரின் அறிவுரைகளும், அன்பு உள்ளமும் அப்படியே என்னுள் இடம்பற்றி இருக்கின்றன. திருமதிக்குத் துரோகம் செய்ய முடியும் என்று என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. உங்கள் உரிமைகளில் குறுக்கிடமுடியாத நிலைமையில்தான் இப்போது நான் இவ்விடம் விட்டுப் புறப்படுகிறேன். நிலைமைகளும், நினைப்புகளும் மாறிவிடக் கூடிய சூழ்நிலை தோன்றத்தான் போகிறது. என் ஆசான் வெற்றி பெறத்தான் போகிறார். வருகிறேன் குணாளா! போய் வருகிறேன் திருமதி!