பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/131

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி

131

மறுத்துவிட்ட நிலையில், உன் மூலம் அந்தப் பொடி மல்ல நாட்டுக்குப் போயிருந்தால்? அடப்பாவி! திருமுடியார் ஆடிக் காட்டிய திருவிளையாடலின் கதாநாயகன் நீதானா? முட்டாளே! அறிவானந்தரின் தலையீடு, அன்று இல்லாமல் இருந்திருந்தால், கடவுளின் பேராலும், பக்தியின் பேராலும் மடமைக்கு தடம் அமைத்துத் தரப்பட்டிருக்குமே! துரோகி! உனக்கு இந்தத் தண்டனை மிக மிகக் குறைவுதான்!

மாத: ஐயோ, மணிவண்ணா! வார்த்தைகளால் என்னைத் துளைக்காதே! இந்த இரணங்களால் என் உடலே துளைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது! மாற்றுப்பொடி! மாற்றுப்பொடி கொஞ்சம்...

மணி: மாதவா! என்ன செய்வதென்றே புரியவில்லை! குணாளனுடன் கொண்ட கருத்து வேறுபாடு காரணமாக நான் ஆய்வுக்கூடத்தைவிட்டே வெளியே வந்துவிட்டேன்! அறிவானந்தரின் ஆராய்ச்சியை இனி நான் தனித்திருந்தே தொடர்ந்து நடத்தப்போகிறேன். மாற்றுப் பொடிக்கான முறை எனக்கு மனப்பாடம். வா! போகலாம். முயற்சிக்கலாம்.

[அவனை அழைத்துக் கொண்டு போகிறான். பெட்டியை எடுத்துக் கொண்டு பின் தொடர்கிறான் மாதவன், துடிதுடித்துக் கொண்டே.]

காட்சி—42

திருமதி: அப்பா! ஏன் இந்தப் பிடிவாதம்? ஊர் மக்களெல்லாம் உங்களைத் தூற்றிப் பேசுகிறார்கள்! அறிவானந்தரென்றால் மனங்குளிர வாழ்த்துபவர்களெல்லாம். இப்பொழுது பரம்பரை எதிரியின் பெயரைக் கேட்டால் கோபப்படுவதுபோல கொந்தளிப்புடன் எழுகிறார்கள்! தெருவில் என்னால் நடந்து வரமுடியவில்லை. வெறுப்பான பார்வையும், இழிவான பேச்சும் என்னைத் தொடர்கின்றன! ஊரில் மதிப்புடன் அமைதியாக இனி என்னால் வாழ முடியாது! உங்களுடன் வேண்டுமானால் இந்தச் சிறைக்குள்ளே தங்கி விடுகிறேன்!