பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/132

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

இன்ப

அறி: (தடித்த குரலில்) ஏனம்மா! அறிவானந்தரின் மகள் என்பதில் வெட்கப்படுகிறாயா? விக்ரமன் குடிமக்களை மட்டுமல்ல, என் மகளையே எனக்கு எதிராகத் திருப்பிவிட்டிருக்கிறான். மகளே! நான் உனக்குச் செய்யக்கூடிய கடைசி உதவி இதுதான்! வீட்டில் எனது பெட்டியில் நூறுவராகன் இருக்கிறது. அதை எடுத்துக் கொண்டு இந்த நாட்டைவிட்டு உன் கண்காணாத வேற்று நாட்டுக்குச் சென்று, சுகமாக இரு! அறிவானந்தரின் மகள் என்று யாரிடமும் கூறத் தேவையில்லை! அறிவானந்தரால் தன்னை மறைத்துக் கொள்ள முடியவில்லை. நீயாவது உன்னைக் காப்பாற்றிக்கொள்! வேண்டுமானால் குணாளனை உனக்குத் துணையாக அனுப்பி வைக்கிறேன்!

திரு: ஐயோ, அப்பா! நான் படும் வேதனை தெரியாமல், ஏதோ சொல்லுகிறீர்களே! என் அம்மா இருந்தால், இப்படி 'போ! தனியாகப் போய்விடு,' என்று சொல்லியிருப்பார்களா, அப்பா? உண்மையிலேயே நீங்கள் கொடுமைக்காரர்தான்; கல் நெஞ்சினர்தான்! மன்னர் எவ்வளவு கெஞ்சிக் கேட்டார்; ஊரில் உள்ளவர்கள் எவ்வளவு வேதனையுடன் பேசிக் கொள்ளுகிறார்கள்! தெரியுமா? "அறிவானந்தர் மட்டும் நமக்கு உதவி செய்தால், திருநாடு வெற்றி பெற்றுவிடும்! அவர் மட்டும் ஏனோ மறுக்கிறார்." என்று ஊர் மக்கள் பெருமூச்செறிந்து, 'கிடைக்கவிருந்த பெரியவாய்ப்பை இந்தக் கிழவன் கெடுத்துவிட்டானே' என்று பேசிக் கொள்ளுகிறார்கள்! அவர்கள் பேசுவதை நீங்கள் நேரில் கேட்டால், இவ்வளவு பிடிவாதத்துடன் இருக்கமாட்டீர்கள் அப்பர்.

அறி: மற்றவர் சொல்வது இருக்கட்டும்! நீ என்ன சொல்கிறாய் திருமதி?

திரு: அப்பா! நானுந்தான் கேட்கிறேன். உங்கள் கண்டுபிடிப்பை, நாட்டுக்கு உதவியாயிருக்குமாறு ஏன் கொடுக்கக் கூடாது? திருநாடு வெற்றியடைவது கண்டு, மல்ல நாட்டாரோ வேறு நாட்டாரோ மனம் புழுங்குவார்கள். ஆனால் நீங்கள் ஏன் திருநாட்டு வெற்றிக்குத் தடையாக இருக்க வேண்டும்?