பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/138

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

இன்ப

[துணைப் படைத்தலைவன், வணக்கம் செலுத்தி விட்டு வெளியே வருகிறான். தலைவன் கூடாரத்துக்குள்ளேயே சிந்தனை செய்தபடி உலவிக் கொண்டிருக்கிறான். சில விநாடிகளுக்குப் பின், துணைத் தலைவன் திரும்பி வந்து...]

துணை: (பரபரப்புடன்) தலைவா! அறிவானந்தர் வருகிறார்!

படை: (திடுக்கிட்டு) அறிவானந்தரா? என்ன உளறுகிறாய்?

துணை: நானும் என் கண்களை முதலில் நம்பவில்லை! ஆனாலும் அவர் அறிவானந்தர்தான்!

[படைத்தலைவன் திரையை விலக்கிப் பார்க்கிறான். வீரர்களைக் கடந்து அறிவானந்தர் வருகிறார். சில வீரர்கள் வாளை உருவுகின்றனர். எதையும் லட்சியம் செய்யாமல் அறிவானந்தர் வருகிறார்.]

படை: சிறையிலிருப்பதாகச் சொன்னார்கள். திடீரென்று நம்மை நோக்கி அவர் வருகிறாரே! ஏன் வருகிறார்? எதற்காக வரவேண்டும்?

[அறிவானந்தர் திரையை நீக்கி உள்ளே வருகிறார்.]

படை: போருக்கு அஞ்சி விக்ரமன் உங்களை அனுப்பிவிட்டானோ! சரண் அடைவது என்றாலொழிய, நீங்கள் பேசத் தேவையில்லை!

அறி: படைத்தலைவரே! நீங்கள் கூறுவது தவறு! விக்ரமன் அஞ்சவில்லை. போருக்குத் தயாராகவே இருக்கிறான்.

படை: அப்படியானால் போரிடச் சொல்லுங்கள்! அதை விட்டுவிட்டுத் தூது அனுப்புவானேன்? திருநாட்டுப் படைகள் தோற்றோடுங் காட்சியைக் கண்டுகளிக்க நீங்கள் வந்திருக்கிறீர்களா?