பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/139

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி

139

அறி: விக்ரமன் அனுப்பவில்லை; அவன் போர் ஆயத்தங்களில் இருக்கிறான். நானாகத்தான் வந்துள்ளேன்! யாருக்கு வெற்றி, யாருக்குத் தோல்வி என்பதைப் பற்றியல்ல! போர் மூண்டால், உன் பக்கத்தில் எவ்வளவு வீரர்கள் இறந்து படுவர்!

படை: சாவுக்கஞ்சாத வீரர்கள், களத்திலே உயிரை விடுவது கிடைத்தற்கரிய பேறாக நினைத்துப் போரிடும் மல்ல நாட்டு வீரர் ஐம்பதினாயிரம் பேர் வெளியில் அணி வகுத்து இருக்கின்றனர்!

அறி: திருநாட்டிலும் போரில் மாள ஐம்பதினாயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் உள்ளனர்.

படை: மல்ல நாட்டுக்கு வலிவு அதிகம்; வீரர் கூட்டம் வந்தபடி இருக்கும்.

அறி: வெற்றியும் தோல்வியும் எண்ணிக்கையை மட்டுமல்ல—யுத்த தந்திரத்தையும் பொறுத்திருக்கின்றன. உணர்கிறேன்! இன்று திருநாட்டை மல்லநாடு வென்று விடுவதாகவே வைத்துக் கொள்வோம்! நாளை மருதூர் நாட்டின் முன் மல்லநாடு சண்டையில் தோற்றோடும் அல்லது திருநாடே வலிவடைந்து மல்ல நாட்டைத் தோற்கடிக்கலாம்! போர் ஒருமுடிவல்ல! ஒரு போர் மற்றொரு போருக்கு ஆரம்பமாகும்!

படை: எதற்காகச் சொல்கிறீர்கள்?

அறி: போர் வேண்டாம் என்கிறேன்! நூறாயிரம் உயிர்களைக் கொன்று குவித்து, எண்ணற்றக் குடும்பங்களில் கண்ணீரை வெள்ளமெனப் பெருக்கி, நீங்கள் காணப் போவதென்ன? விக்ரமன் மாவீரனா? மார்த்தாண்டன் மாவீரனா? அந்தக் கேள்வியின் பதிலை, பல்லாயிரக்கணக்கான மக்களின் இரத்தத்தில் தோய்த்துதான் எழுதவேண்டுமோ?

படை: சண்டைக்குச் சென்றால் மல்ல நாட்டுக்கு வெற்றி நிச்சயமென்றதும், சமரச கீதம் பாடவந்து விட்டீரே! அழிவு வேண்டாமென்றால், எதிர்க்கும் ஆற்றல் விக்ரமனிடம் இல்லையென்றால், சரணாகதி அடையட்டும்! வலுவிருந்-