பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/143

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி

143

அறி: அட முட்டாளே! ஆராய்ச்சித் துறையில் அவன் எவ்வளவு முன்னேறி இருந்தான் தெரியுமா? துரத்திவிடும் அளவுக்கு என்ன தவறு செய்தான்? திருமதி அவனைத் துரத்த எப்படி அனுமதித்தாள்?

குணா : தவறேதும் செய்யவில்லை அப்பா! தவறு செய்தவன் நான்தான்! தாங்கள் பிடிவாதமாகப் போருக்கு உதவி செய்ய முடியாது என்றதும், நீங்கள் எதிரிகளுக்குச் சாதகமாக இருக்கிறீர்கள் என்றும் எண்ணிவிட்டேன்! நாசப் பொடியை விக்ரமனிடம் கொடுத்துவிட முடிவு செய்தேன். மணிவண்ணன் மறுத்தான்! மல்ல நாட்டு ஒற்றன் நீ என்று தூற்றினேன்! மனம் பொறாமல் குமுறி அழுதான்...

அறி: அடப்பாவி! எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டாய்! என் இலட்சியங்களை முழுமையாக ஏற்றுக்கொண்டதற்காக அவனுக்குத் தண்டனையா? விக்ரமனைவிட கொடியவனடா நீ குணாளா, கொடியவன் நீ.

குணா: உண்மைதான் அப்பா! மணிவண்ணனுக்குக் கொடுமைதான் இழைத்துவிட்டேன்!

[திருமதி தேம்பிக் கொண்டிருப்பதைப் பார்த்து]

அறி: அழாதே திருமதி! எங்கிருந்தாலும் அவனைத் தேடிப் பிடித்து அழைத்து வருகிறேன்.

குணா: நான் மணிவண்ணனுக்குக் கொடுமை செய்தேன். ஆனால் அப்பா! யாரோ நமக்கு மிகப் பெரியதொரு கொடுமையைச் செய்திருக்கிறார்கள்.

அறி: என்ன உளறுகிறாய் குணாளா?

குணா: உளறவில்லை அப்பா, உண்மையைச் சொல்கிறேன்!

அறி: என்ன அந்தப் பெரிய உண்மை?

குணா: நம்முடைய ஆராய்ச்சிக் குறிப்பேட்டைக் காணோம்!

அறி: (பதறியபடி) குறிப்பேட்டையே காணோமா? (தனக்குள் யோசித்தபடி) அன்று, நாசப்பொடி செய்யும் குறிப்பு மட்டும் காணமற்போனது! இன்று சுவடி முழுவதையும் காணோம்! யார் இதனைச் செய்திருக்க முடியும்?