பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

இன்ப

அறி: ஓய்வு இல்லைன்னா மருந்து போட்டுப் பயன் இல்லியே சடையப்பா.

சடை: படிப்படியா குறையட்டுங்க வீக்கம்! தங்கமான மனசு உங்களுக்கு! மத்தவுங்க கஷ்டப்படறதைச் சகிக்க முடியலை உங்களாலே! அதனாலேதான் வேலைக்குப் போக வேண்டாமுன்னு சொல்றீங்க! ஆனா, அதைப் பார்த்தா முடியுங்களா? வயிறு ஒண்ணு இருக்குதுங்களே...

அறி: ஆமாம்! வயிறு இருக்குது வயிறு! வீக்கமோ, ஏக்கமோ, காய்ச்சலோ கடுப்போ, இருமலோ, இழுப்போ, எது இருந்தா என்ன? வயிறு இருக்கே வயிறு... அந்த வயித்தைக் குளிரவைக்கணுமே! சடையப்பா! போ! உன் எஜமான் மனசைக் குளிரவை! அப்போதுதான் உன் வயிறு குளிரும். போ!

[சடையப்பன் போகிறான். அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர்வாய் முணுமுணுத்துக் கொண்டே இருக்கிறது. வயிறு இருக்கிறதாம் வயிறு! வாழ்வு இருக்கிறதா? வளம் இருக்கிறதா? வயிறு மட்டும் இருக்கிறதாம் வயிறு]

காட்சி—3

[திருநாட்டுப் பெரியகோயில், அம்பாள் சந்நிதி, அலங்காரம் அற்புதமாக இருக்கிறது. போரில் கண்ட வெற்றி காரணமாக அன்று அம்பாளுக்கு விசேஷ அபிடேகத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. கூட்டம் அதிகம்; குருக்கள்களும் அதிகம்தான்! அம்பாளுக்கு பலதரப்பட்ட பூசை, புனஸ்காரங்கள், தூப தீபங்கள் ஏற்றிக் காட்டப்படுகின்றன. பக்தர்கள் கன்னத்தில் போட்டும் தோப்புக் கரணம் போட்டும் தங்கள் பக்தியை, பரமாதாவுக்குப் படைக்கின்றனர். குருக்கள் நிவேதியம் வழங்குகிறார். வழங்கிக் கொண்டே....]