பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

இன்ப

அருண: உங்கள் பேராற்றலை நான் மிகவும் மதிக்கிறேன் தளபதியாரே! ஆனால் போர் வெறியைக் கண்டிக்காமலிருக்க முடியாது. 'உணவுக்கு வழி என்ன? உடுப்பதற்கு வேறென்ன' என்று ஏங்கிக் கிடக்கும் மக்களின் எண்ணிக்கை மிகுந்துகொண்டு வருகிறது.

விக்ர: இயற்கை வளம் இல்லை. தொழில் திறமை இல்லை! செல்வம் மிகுதி இல்லை! என்ன செய்ய முடியும்?

அருண: திருநாட்டிலில்லாத வளமும், திறனும், வாழ்வும் பிற நாட்டுக்கு ஏது? மக்கள் வாழவேண்டும் என்று நினைக்கிறார்கள்! வாழ்வுக்கான வழிமுறைகளை வகுக்கிறார்கள். மக்கள் வாழ்கிறார்கள். மன்னர்களும் வாழ்வு பெறுகிறார்கள். தளபதியாரே! படைகளுக்கு மட்டும் நீர் தளபதியாயில்லை. பாராளும் மன்னனுக்கும் நீங்கள் தலைவராக இருக்கிறீர்கள். நாட்டைப் புரக்கும் நற்பணிக்காக நீங்கள் நியமிக்கப் பெற்றிருக்கிறீர்கள். அதற்கான முறைகளில் உங்கள் சிந்தனை, செயல், சேவை அனைத்துமிருக்க வேண்டும்; ஆலோசியுங்கள்.

[வேகமாகப் போய்விடுகிறார். குமாரவேலன் வந்து கொண்டே...]

குமார: அமைச்சர் பேசியவைகளை கேட்டுக் கொண்டுதானிருந்தேன் தளபதியாரே! அறிவுரை தரும் அளவுக்குத்தானே அவரை வைத்திருக்கிறோம். ஆக்கப் பணிகளை ஆக்கித் தரவேண்டியது நீங்கள் அல்லவா! அதனால்தான் அவர் அவை பற்றி உங்களிடம் கூறுகிறார்.

விக்ர: உண்மைதான் மன்னா! அவை பற்றிக் கவனிக்கிறேன்! சீன நாட்டிலே இருக்கும் நம் தூதுவருக்கு வயதாகிவிட்டதாம்! அலுவல்களைக் கவனிக்க முடியாத அளவுக்கு முதுமை. அறிவுச்செறிவுமிக்க ஒருவரை அனுப்புவதுதான் நல்லது. அமைச்சர் அருணகிரியாரை, சீனநாட்டுத் தூதுவராக அனுப்பி வைக்க, தங்கள் அனுமதியை வேண்டுகிறேன்.

குமார: நல்லது என்று எண்ணுகின்ற எந்த ஒன்றுக்கும் என் அனுமதியை எதிர்பார்க்க வேண்டியதில்லை என்று எத்தனையோ முறை எடுத்துச் சொல்லிவிட்டேன்.