பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி

25

விக்ர: என்றாலும், நான்...

குமார: நாட்டுப் பாதுகாவலர்! அறிவேனே நான். நல்லதைச் செய்யுங்கள். நாட்டு மக்களை நல்லபடி வாழச் செய்யும் திட்டங்களைத் தீட்டுங்கள்!

[மன்னன் போகிறான். குழம்பிய நிலையில் அங்குமிங்கும் உலவிக் கொண்டிருக்கும்போது திருமுடியார் வருகிறார்.]

திருமுடி: (வந்துகொண்டே) அரசர் இங்கே இருக்கக் கூடும் என்று வந்தேன்...

விக்ர: இருந்தார், போய்விட்டார்! ராஜ குருவுக்கு ராஜனிடம் மட்டும்தான் வேலையோ?

திருமுடி: அப்படியொன்றுமில்லை. அரசரிடம் சில ஆலோசனைகளைக் கூறலாமென்றுதான் வந்தேன்!

விக்ர: அந்த அற்புத ஆலோசனைகளை அடியேன். அறிந்துகொள்ளலாமோ?

திருமுடி: அரசர் அறிந்தாலும், அது விக்ரமரிடம் வந்துதானே தீரும். அறிந்துகொள்வதோ, அறிவிப்பதோ தவறில்லையே! தளபதியாரே! நாட்டிலே வறுமை மிஞ்சி, வளங்கெட்டுக்கிடக்கிறது. வரி செலுத்தக்கூட வக்கற்றுக் கொண்டிருக்கிறார்கள் மக்கள். இவையெல்லாம் எதனால்? வளமார் திருநாடு என்று வாய் மணக்கப் பாடினோமே, அந்த வளம் எங்கே மறைந்து கொண்டுவிட்டது? வீரத்தின் சிகரம் விக்ரமன் இருக்கும்போது வீழ்ச்சி நிலை ஏன்? வெண்ணாட்டை வென்ற பேராற்றல் இருக்கும்போது மக்களிடம் விரக்தி நிலை ஏன்?

விக்ர: அரசகுரு அதற்குக்கூறும் காரணம்?

திருமுடி: விக்ரமரே! வீரத்தை வெளிக்காட்டும் ஆற்றல் மட்டும் இருந்தால் போதாது; அருள் வேண்டும்! ஐயன்மீது ஆள்வோருக்கும், மக்களுக்கும் பக்தி சுரக்க வேண்டும்! அதனைச் சுரக்கச் செய்யும்படி கலனான கோயில்கள் புதுப்பிக்கப்பட வேண்டும்; விழாக்களையும் வேள்விகளையும் விடாமல் நடத்தும்படி உத்திரவு அல்ல, உருப்படியான உதவிகளைச் செய்ய வேண்டும், ஒழுங்கான முறையில்.