பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி

37

குணாளன் முகத்தைத் துடைத்து விடுகிறான். திருமதி மருந்தைவிட்டு, ஒரு துணியால் கட்டி விடுகிறாள். அறிவானத்தர் கண்விழித்து எழுந்து உட்காருகிறார்]

திரு: அப்பா! எப்படி இருக்கிறது?

அறி: நன்றாகத்தானிருக்கிறேன்! (அவர்களை விலக்கிக்கொண்டு ஆய்வுக்கூடத்தை நோக்கிப் போகிறார்.)

குணா: போதும், அப்பா! படுத்துக் கொள்ளுங்கள்; நாளைக்குக் காலையில் பார்த்துக் கொள்ளலாம்!

அறி: நாளை நாளையென்று எதை ஒத்திப்போட முடியும் குணாளா! இன்று எவ்வளவு நாழியானாலும், அதை முடித்துவிட்டால் தான் எனக்குத் தூக்கம் வரும்!

திருமதி: இப்பொழுதுதான் குழாய் வெடித்து விபத்து வந்தது! (சிதறிக் கிடக்கும் கண்ணாடித் துண்டுகளைச் சேர்க்கிறாள்.) அதற்குள் மறுபடியும் அதே வேலைக்கு வந்துவிட்டீர்கள்!

அறி: (உடைந்த கண்ணாடித் துண்டு ஒன்றை எடுத்துப் பார்த்த வண்ணம்) திருமதி! நாற்பது நாட்களாக எவ்வளவு சோதனைகள்! எத்தனை தடவை திருப்பித் திருப்பிச் செய்தேன்! எவ்வளவு மனப் போராட்டம், சிக்கல்கள்! இந்தக் கண்ணாடிக் குழாய் வெடித்திராவிட்டால், என் மண்டையல்லவா இந்நேரம் வெடித்திருக்கும்? குணாளா! இயற்கையிடமிருந்து ஒரு இரகசியத்தைப் பெறுவது, எதிரியிடமிருந்து ஒரு கோட்டையைப் பிடிப்பதைவிடக் கடினமான செயல்!

[அறிவானந்தர் பேசிக் கொண்டே குழாய்களை அடுக்கி வைக்கிறார்.]

குணா: அப்பா களைப்பாக இருக்கிறீர்கள்! சற்றுப் படுத்து உறங்குங்கள்! நான் அதுவரையில் பார்த்துக் கொள்கிறேன்!