பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

இன்ப

அறிவா: குணாளா! அஞ்சாநெஞ்சன் என்ற வீர விருது பெறத்தான் இதுவரையில் பயிற்சி மேற்கொண்டிருந்தாயே தவிர, இந்தக் கிழவனின் ஆராய்ச்சி பற்றி அக்கறை எடுத்துக் கொள்ளாமலேயே இருந்துவிட்டாய். பட்டாளத்தில் பணி வேண்டாம் என்றவுடன் பற்றேற்பட்டுவிட்டது, ஆராய்ச்சியில்! வீரமும், விவேகமும் இருந்தால் எதிரியின் தலையை, தாளின்கீழ்ப் போட்டு மிதிக்க முடியும். இது அப்படி அல்லவே! இயற்கையின் இரகசியங்கள் மகனே! மிகுந்த கவனம் தேவை! கடுமையான உழைப்பு வேண்டும்! முடியுமா உன்னால்?

குணா: முழு அளவும் உழைக்காமல், உரிமைக்கும், ஊதியத்துக்கும் மட்டுமே உரத்த குரலெழுப்புவோரை உற்பத்திச் செய்துதரும் நாளாக இது இருக்கிறதேயென்று அப்படிக் கேட்கிறீர்களா அப்பா! உயர்வு, உழைப்பில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்தவன்; உணர்த்துபவன்! உங்கள் மகன் அப்பா நான்! உங்கள் மகன்!

அறி: (புன்னகையுடன்) சரி, பார்க்கலாம்! இந்தக் குழாய்மீது சூடேறியதும் கொதித்து ஆவி கிளம்பும்பொழுது (ஒரு குப்பியைக் காட்டி) இந்தப் புட்டியிலிருப்பதை (ஒரு குறியிட்டு) இந்த அளவுக்கு ஊற்றவேண்டும்! பின் அது அதிகமாகக் கொதித்து வருகிறதா என்று பார்க்கவேண்டும்.

குணா: சரியப்பா!

[குணாளன் மிக உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கிறான். அறிவானந்தரும் கவனித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் களைப்பு மிகுதியால் சாய்ந்து உறங்கிவிடுகிறார்.]

திருமதி: அண்ணா! ஆபத்தான சோதனை. சற்றுமுன் தான் வெடித்தது!

குணா: அதற்காகப் பயந்து ஓடிவிடச் சொல்கிறாயா? அப்பா மட்டும், அவ்வளவு ஆபத்துக்களுக்குமிடையில், மூர்ச்சையாகும் வரை நிற்கவில்லையா?