பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி

49

மணி: விஞ்ஞான ஆராய்ச்சியை அவரிடமிருந்துதானே பழகிக் கொள்கிறேன். யவன நாட்டு அனுபவம் அவருக்கு அந்த முறையில் பயன்படுகிறது. நிறைந்த இயற்கை நூல் பயிற்சியை நாட்டுக்குப் பயன்படுத்த முயல்கிறார். நான் உன் அப்பாவோடு பழகத் தொடங்கினேன்! ஆராய்ச்சி அறிவு கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. உன் அண்ணன் குணாளனுடன் பழகத் தொடங்கினேன்; தமிழர்களின் உயரிய பண்பாட்டைக் கற்றுக்கொள்ள முடிந்தது. இப்போது உன்னிடம் பழக நினைக்கிறேன்...

திரு: எதைக் கற்றுக் கொள்ளப் போகிறீர்களாம்?

மணி: திருமதி, திருமதி! மானைப் பார்த்து, அதன் மானத்தைப் பற்றி அறிகிறோம்; பசுவைப் பார்த்து அதன் எளிமையை உணர்கிறோம். பஞ்சவர்ணக் கிளியைப் பார்த்து எழில்களின் கூட்டுச்சேர்க்கை எப்படி இருக்கும் என்று கற்கிறோம்! இயற்கையின் படைப்பில் எத்தனையோ இரகசியங்கள் இருக்கின்றன என்றுதானே உன் அப்பாவும் ஆராய்ச்சியில் மூழ்கிக்கிடக்கிறார். நாமெல்லாம் அவருக்குத் துணையாக இருக்கிறோம்; எழிலின் இருப்பிடமாய், இன்பத்தின் பிறப்பிடமாய், குயிலுக்குக்கூட குரல் கொடுப்பவளாய் வாழ்ந்தால் உன்னோடு வாழவேண்டுமென்ற உள்ளக் கிளர்ச்சியை ஊட்டுபவளாய், எழில் வடிவத்தின் இன்பக் கலவையாய் இருக்கின்ற உன்னிடமிருந்து கற்றுக்கொள்ள எத்நனையோ இருக்கிறதே திருமதி! என்னையே உன்னிடமிருந்து தானே இப்போது உணர்ந்திருக்கிறேன்.

திரு: போதுமே புகழ்ச்சி! புகழ்ச்சி ஒரு மயக்கம்; அதிலே நான் தேனீயாய் விழுந்துவிடுவேன்னு நினைக்காதீங்க!

மணி: நீ தேன் திருமதி, நான்தான் தேனீ!

திரு: இருக்கும் இருக்கும்! அப்பாகிட்டே சொல்கிறேன்.

மணி: (குழைவாக) சொல்லேன்! எனக்கென்ன பயமா? எழிலரசி இத்தனை வயதாகி இருக்கிறாளே, இவளுக்கு என்னென்ன ஆசைகளோ இருக்குமே! நாம் ஆராய்ச்சியிலேயே