பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

இன்ப

முழுகிக் கிடந்துவிட்டோமே! அடடா, தவறு செய்துவிட்டோம்! நம் தவறை நல்லபடி மணிவண்ணன் உணர்த்திவிட்டான் என்று நினைத்துப் பாராட்டத்தான் செய்வார்! தெரியுமா திருமதி?

திரு: ரொம்பவும் துணிச்சல்தான்!

[ஏதோ பச்சிலையொன்றைப் பறிக்கக் கீழே குனிகிறாள். மணிவண்ணன் அவளை நெருங்கி, அவள் இடுப்பில் இருகரங்களையும் கோர்த்துப் பிடித்துக் கொண்டு]

மணி: இப்போது சொல் திருமதி! என் துணிச்சல் சரியானதுதானா, இல்லையான்னு!

[திருமதி சிரித்துக் கொண்டே நிமிர்கிறாள். மணிவண்ணன் அவளை இழுத்து அணைத்துக் கொள்கிறான்.]

திரு: (அணைப்பிலிருந்து விடுபட்டு) பொல்லாத குறும்புக்காரர் நீங்கள்!

மணி: இந்தக் கரும்பைச் சுவைக்க, குறும்புதானே வேண்டியிருக்கிறது! என் தவறா இது? நீ அழகா இருப்பது தவறு; அதைவிட அறிவுமிக்கவளாக இருப்பது தவறு; அதைவிடப் பெரிய தவறு அறிவானந்தருக்கு மகளாக மட்டும் இருப்பது?

திரு: ஊம்? அப்புறம்...

மணி: எனக்கு...எனக்கு...

திரு: சொல்லுங்களேன்! சொல்லமுடியவில்லையா?

மணி: சொல்லிவிடுவேன். சொல்லட்டுமா? என் வாயால் சொல்லிக் கேட்கவேண்டும். சொல்லிவிடுகிறேன்!

[சட்டென்று திருமதி அவன் வாயைப் பொத்தி விடுகிறாள்.]

மணி: இது குறும்பு அல்லவா திருமதி! ஒரு பெண், ஒரு ஆடவனைத் தொடலாமா?

[அவள் நாணத்துடன் தலைகுனிந்து கொள்கிறாள்.]