பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி

57

மாறு மாதவன் சைகை செய்கிறான். ஆராய்ச்சி சாமான்களை குணாளன் விளக்குகிறான். மணிவண்ணனும் திருமதியும் கேட்டபடி இருக்கிறார்கள். கட்டடம் வானோங்கி வளர்ந்திருக்கிறது.]

காட்சி—24

[ஆய்வுக்கூட அமைப்புக் காரணமாக, அரசாங்கத்தின் சார்பில் கலைவிழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு, ஊர் பிரமுகர்களும், முக்கியஸ்தர்களும் அழைக்கப் பட்டிருக்கிறார்கள். முன்னேற்றத் திட்டங்கள் பற்றிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தப் பெறுகின்றன. இறுதியில் மாலதியின் நடனம் நடைபெறுகிறது. நடன அரங்கின் முன் வரிசையில் மன்னன், விக்ரமன், மற்றும் கார்மேகமும், மணிவண்ணனும்! அவர்களை அடுத்து குணாளனும், திருமதியும்! அவளை அடுத்து மாதவனும் அமர்ந்திருக்கிறார்கள். திருமதி நடன நிகழ்ச்சிகளுக்கிடையே மணிவண்ணனைக் கண்டு கண்களினால் பேசுகிறாள். அவனும் அப்படியே பேசுகிறான். இவற்றைக் குணாளன் கவனித்தபடி இருக்கிறான். முன் வரிசையிலிருந்து கார்மேகத்தை, மாலதி கூர்ந்து கவனிக்கிறாள். ஆடிக் கொண்டிருந்த அவள், திடீரென்று மூர்ச்சையடைகிறாள். சட்டென்று விக்ரமன் மேடையேறி வந்து...]

விக்ர: பிரமுகர்கள் மனம் வருந்தும்படியாக நிகழ்ச்சி தடைப்பட்டுப் போனதற்கு வருந்துகிறோம். நாட்டியக்கலாராணி என்ற விருது பெற்றவள்தான் மாலதி. ஏனோ, எதிர்பாராதது இந்த நிலை! இதற்காக...

[என்றதும் யாரும் எதிர்பாராத விதமாக, திருமதி தன் இருக்கையிலிருந்தபடியே]

திரு: இதற்காக யாரும் குழப்பமடைய வேண்டாம்! விழா இனிதே முடிய வேண்டும்! நானே ஆடுகிறேன்.