பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

இன்ப

மணி: அழகு அவளிடம் பிச்சை வாங்கணும்! நேரில் பார்த்தாதான் தெரியும்!

அம்: ஒரு நாளைக்கு அந்தப் பெண்ணைப் பார்க்க வேண்டும்.

[மணிவண்ணன் கிளம்புகிறான்.]

அம: எங்கு கிளம்பிவிட்டாய், மணிவண்ணா!

மணி: இப்பொழுதே போய் திருமதியை அழைத்துக் கொண்டு வருகிறேன். உங்களுக்கு எதற்கு மனக்குறை?

அம: இப்பொழுது வேண்டாம்! நாளைக் காலை பார்க்கலாம்! சாப்பிடவா! நீங்கள் குறையில்லாமல் வாழ்ந்தால் அதுவே எனக்குப் போதுமானது! (போகிறாள்)

[மணிவண்ணன் உள்ளே போக எத்தனிக்கிறான். கார்மேகம் கூப்பிடுகிறான்.]

கார்: தம்பி! மிகவும் அலுத்திருக்கிறாயே, ஆய்வுக் கூடத்தில் வேலை அதிகமோ?

மணி: அனலிலும் ஆவியிலும் நின்றல்லவா ஆராய வேண்டியிருக்கிறது!

கார்: அப்படியென்ன கடுமையான வேலை நீ செய்கிறாய்?

மணி: இரணத்தை உண்டாக்கும் பொடிக்கு மாற்று ஒன்று அறிவானந்தர் கண்டு பிடித்துள்ளார். அதைச் செம்மைப்படுத்தி வருகிறோம்!

கார்: ஆமாம், ஒரு பொடியைத் தூவினால் உடனே இரணம் உண்டாவது வேடிக்கைதான்! அந்தப் பொடியை எப்படிச் செய்கிறார்கள்?

மணி: எப்படிச் செய்கிறார்களென்று எனக்குத் தெரியாது!

கார்: உனக்குத் தெரியாதா? நீ மட்டும் அறிவானந்தரைக் கொண்டாடி வருகிறாயே யொழிய, அவர்கள் பல இரகசியங்களை உன்னிடம் சொல்லாமல் மறைத்து வருகிறார்கள்!