பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி

67

காட்சி—26

[மாலதி, நடன அரங்கில் ஏற்பட்ட தடுமாற்றம் பற்றி வருந்தியவளாக அமர்ந்திருக்கிறாள். அந்த நிலைக்குக் காரணத்தை எண்ணிப் பார்க்கிறாள். நெஞ்சம் திடுக்கிடுகிறது.]

மாலதி : (தனக்குள்) ஆமாம்; அவரேதான். மல்ல நாட்டுப் பிரபு—கார்மேகம்தான்! அவர் இங்கே எத்தனை நாட்களாக இருக்கிறார்? மல்ல நாட்டு அரண்மனையைச் சேர்ந்த அவருக்கு இங்கென்ன வேலை இருக்கும்?

[முடிவுக்கு வரமுடியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறாள். தோழி ஒருத்தி வந்து...]

தோழி: ஆண்டவனின் அடியார் ஒருவர் வந்திருக்கிறார். உள்ளே வர அனுமதி கேட்கிறார்.

மாலதி: (சிரித்துக் கொண்டு) ஆண்டவனின் அடியாருக்கு என் வீட்டில் வேலையா? எப்படி இருக்கிறார் அவர்?

தோழி : இளமை கழிந்தவர்தான்! திருநீற்று நெற்றி! உருத்திராட்சமாலை.. உங்களுக்குத் தெரிந்தவர்தான் அம்மா!

மாலதி: பைத்யக்காரி! திருமுடியார் அல்லவா வந்திருக்கிறார்! வீதியிலே நிறுத்திவிட்டு வந்திருக்கிறாயா, அந்த ஆண்டவனின் அடியாரை!

தோழி: இதோ அழைத்து வந்துவிடுகிறேன் அம்மா!

[திருமுடியார் வந்துகொண்டே]

திரு: அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நானே வந்துவிட்டேன் மாலதி!

[மாலதி எழுந்து சென்று வரவேற்கிறாள்.]

மாலதி: சொல்லி அனுப்பி இருந்தால் நானே வந்திருப்பேன்...

திரு: செய்திருக்கலாம்! அவசரமாக இருந்தது. உணர்த்திப் போகலாமென்று நானே வந்துவிட்டேன்.

[ஆசனம் ஒன்றில் அமர்கிறார்.]