பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி

73

மால: (மாதவன் கன்னங்களில் மாறி மாறி முத்தங்கள் கொடுத்து) அப்பாடா! இப்பதான் என் கண்ணாளர் நீங்க! மாலதி–மாதவன்ங்கிறதுக்கு இப்பதான் பொருத்தமே ஏற்பட்டிருக்கு! கண்ணாளா, அப்படி ஒண்ணும் பெரிசா கேட்டுடப் போறதில்லை; பட்டதும் இரணம் உண்டாக்கும் பொடி கொஞ்சமும், அதற்கு மாற்றுப்பொடி கொஞ்சமும் வேணும்!

மாத: ஐயையோ! பெரிசாக் கேட்டுட்டியே மாலதி! இப்ப இவை உனக்கு எதுக்கு?

மால: சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கப் போறேன்! நீங்க இருந்து என்ன பிரயோசனம்? ஐம்பது பொன்னுக்கு அல்லும் பகலும் பாடாய்ப்படுறீங்க! நான் கேட்டதைக் கொடுத்தா ஐநூறு வராகன் முழுசாக் கிடைக்கும்! ரெண்டு பேருக்கும் கொண்டாட்டம் இல்லையா!

மாத: ஐநூறு வராகனா!

[வாயைப் பிளக்கிறான். மாலதி அவன் கைகளை எடுத்துத் தன் கன்னங்களில் ஒற்றிக் கொண்டவளாக...]

மால: இன்னொன்னு! அதைத் தயாரிக்கிற முறையும் எழுதிக் கொடுத்தா, இன்னொரு ஐநூறு வராகன்!

மாத: ஆயிரமா! அம்மாடியோவ்!

மால: அதிகமும் கிடைக்கும்!

மாத: அதெல்லாம் ரொம்ப ரகசியமாச்சே மாலதி!

மால: அப்போ, என்மேலே உங்களுக்கு நம்பிக்கை இல்லேன்னு சொல்றிங்களா...

மாத: நீ அப்படியெல்லாம் கோவிச்சிக்கப்படாது... வா, போகலாம்!

மால: எங்கே, கூப்பிடுறீங்க...ஆராய்ச்சிக்கூடத்துக்கா? அங்கெல்லாம் நான் வரமாட்டேன்!

மாத: போயும் போயும் உன்னை அங்கே அழைப்பேனா? வழக்கமாபோற இடத்துக்குப்போவோம் வான்னா..