பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

இன்ப

அடி 1: அப்படியல்ல ஐயா! ஆண்டவன் மீது பக்தி நாட்டு மக்களுக்குக் குறைந்துவிட்டதால்தான் இந்தக் கேடுகள் என்கிறார் அவர். மல்லநாடுகூட போர்தொடுத்திருக்கிறதாமே, அதிலே நம் நாடு வெற்றி பெறவேண்டுமானால் ஆண்டவன் அருள் இருக்கவேண்டுமாம்! வெண்ணாட்டை வென்றதற்குக் கூட, அம்பாளின் அருள்தான் காரணமாம். நாத்திகக் கருத்துக்கள் நாடாள்வோருக்கே வந்துவிட்டதனால்தான் இவ்வளவு பெரிய விபரீதங்கள் எல்லாம் ஏற்படுகின்றன என்கிறார். கடவுளின் கடாட்சம் பெரியதா? விக்ரமனின் வீரம் பெரியதா என்று காட்ட விநாயகப் பெருமானின் துதிக்கையிலிருந்து நெருப்பையே வரவழைத்துக் காட்டப் போகிறாராம்.

பெரிய: உண்மையாகவா! அப்படிச் செய்தால், அது அதிசயம்தான்! ஆண்டவனின் சக்திதான் அகிலத்தை ஆள்கிறது என்று ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்!

அடி 2: அடுத்த வெள்ளிக் கிழமை, வரசக்தி விநாயகர் கோயிலுக்கு வாருங்கள்! இந்த அதிசயத்தை நேரிலேயே பாருங்கள்!

பெரி: பார்ப்போம், பார்ப்போம்.

[கூறிவிட்டு பெரியதனக்காரர் போகிறார். அவர் இரண்டொரு தெருக்களைக் கடப்பதற்குள் திருமுடியார், 'வித்தை' செய்து காட்டி ஆண்டவன் அருளை நிரூபிக்கப் போகும் நிகழ்ச்சி தண்டோராமூலம் அறிவிக்கப்படுவதைக் கேட்கிறார். திருமுடியார், தேவாலயங்களின் அதிபராக இருந்த காலத்திலிருந்து அவரை அறிவாராகையால் உண்மையாகவே இப்படி நடக்கக் கூடுமா என்று ஐயுறுகிறார். இந்த அதிசயம் பற்றி அவரும் பலரிடம் கூறுகிறார். அந்தப் பலரும் வேறு பலரிடமும் கூறுகிறார்கள்.

[அறிவானந்தரைப் பற்றிய இந்தச் செய்தி அரண்மனைக்குள்ளும் நுழைகிறது.]