பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இன்ப ஒளி

கதையுள் புகுமுன்:

பேரறிஞர் அண்ணா அவர்களின் இந்தக் கதையைப் படிக்குமுன் ஒரு வார்த்தை. பல்லாண்டுகளுக்கு முன்பு "விஞ்ஞானி" என்ற தலைப்பில் 'திரைப்படமாக' வெளிவர இருந்தது இந்தக் கதை.

அறிஞர் அண்ணா அவர்கள், இந்தக் கதையை குறிப்புக்களாகவும், சில இடங்களில் உரையாடல்களாகவும், சில இடங்களில் நிகழ்ச்சிச் சித்திரமாகவும், முழுக் கதையையும் எழுதி இருக்கிறார்கள்.

என்றாலும் கடந்த 1968—ஆம் ஆண்டு "காஞ்சி" பொங்கல் மலரில் இதனைத் தொடர் கதையாக எழுதத் தொடங்கியபோது, நாடக வடிவத்திலிருந்து, உரைநடை வடிவாக்கி, கதையில் சில புதிய திருப்பங்களையும் புகுத்தி, மூலப் பிரதியிலிருந்து மாறுபாடு பெறும் தன்மையில் சில சிறிய மாற்றங்களைச் செய்திருந்தார்கள்.

கதை வடிவத்தையும் நிகழ்ச்சிக் குறிப்பு வடிவத்தையும் உரையாடல் வடிவத்தையும், ஒன்றாயிணைக்கும்போது ஏற்பட்ட முரண்பாடுகளைத் தவிர்க்கும் நோக்கத்துடன்தான் 1968 பொங்கல் மலரில் தொடங்கிய உரைநடைமுறையினை மூலப் பிரதிக்கு ஒத்தவடிவத்திலே, நாடக முறையிலே மாற்றி இருக்கிறோம். அந்த முறையிலேயே இப்போது நீங்கள் 'இன்ப ஒளி'யைக் காணப் போகிறீர்கள்!