பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

இன்ப

[மீண்டும் ஆராய்ச்சிக் கருவிகளிடையே புகுகிறார். பல்வேறுபட்ட திரவங்களையும் சுண்ணங்களையும் கலந்து, வெவ்வேறு முறையில், வெவ்வேறு கருவிகளில் கொட்டத் தொடங்குகிறார்.

[விக்கிரமன் மகிழ்ச்சியுடனும், இன்னொருபுறம் வேதனையுடனும் போகிறான். மல்ல நாட்டுப் போருக்கு, அறிவானந்தரின் உதவி கிடைக்காவிட்டால் அவரை என்ன செய்வது என்ற சிந்தனை அவனைக் கப்பிக்கொள்கிறது. அதே சமயம் திருமுடியாரை அறிவானந்தர் வெற்றி கொள்ள முடியுமா? உண்மையிலேயே ஆண்டவனின் அருள் அவருக்குக் கிடைத்திருந்தால். என்ன செய்வது என்ற ஐயமும் ஏற்படுகிறது. குழப்பத்தோடு போகிறான்.]

காட்சி—33.

[சித்திவிநாயகர் கோவில்! வெகுவாக அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. கோவிலுக்குள்ளிருக்கும் எல்லா விக்ரகங்களும் சிறப்பாக, அலங்கரிக்கப்பட்டு, பார்க்கும் போதே பக்தி சுரக்கும்படியான பாங்கிலிருக்கின்றன. வரசித்தி விநாயகர் வண்ணப் பூக்களாலும் வாசனைப் பொருள்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கிறார். கடவுள் நம்பிக்கை இல்லாதார் கூட, அந்த அலங்கார அமைப்பைப் பார்க்கும்போது, சித்தங் குழம்பி, கன்னத்தில் போட்டுக் கொள்ளும்படியான முறையில் விநாயகர் விக்கிரகம் இருக்கிறது. எதிரே சற்றுத் தள்ளி பச்சைத் தென்னை ஓலையால் சிறு பந்தல் போடப்பட்டு, ஓம் குண்டம் வளர்க்கப்பட்டிருக்கிறது. குண்டத்தைச் சுற்றி அமர்ந்திருக்கும் பல புரோகிதர்கள் நெய், எண்ணெய், முதலானவைகளை ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைச் சுற்றி அமர்ந்திருக்கும் வேதியர்கள், வேதபாராயணங்களை விண்ணதிர முழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.