பக்கம்:இன்ப வாழ்வு.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிலாடு முன்றிலார்

கருத்து ஒருமித்த காதலர் இருவர் இனிதே இல்லறம் நடத்தி வந்தார்கள். காதல் வாழ்க்கையின் இலக்கணத்தை அறிய விரும்புவோர்க்கு அவர்தம் உயரிய வாழ்க்கை இனியதோர் எடுத்துக்காட்டாகும் என்பதில் எள்ளளவும் ஐயமிராது. மாண்புமிக்க மனையாளுடன் கூடி வாழ்வதால் ஏறுபோல் பீடுநடை உடையவனாகத் திகழ்ந்தான் காதலன். கண்ணினும் இனிய கணவனுடன் கூடி வாழ்வதால் தனியழகு பெற்றுத் திகழ்ந்தாள் காதலியும். இங்ஙனம் இவர்கள் இன்ப வாழ்வின் எல்லையில் நின்று இறுமாந்திருந்தனர்.

வாழ்க்கையில் இன்பம் என ஒன்றிருந்தால் துன்பம் என ஒன்றும் இடையே இருக்கும் அல்லவா? அவ்வூர் அரசன் வேற்று நாட்டின்மேல் படையெடுத்தான். அரசனுடன் போர் மறவனாகச் சென்றான் காதலன். காதலி வீட்டில் தனித்தாள். நாட்கள் பல கடந்து மறைந்தன. காதலன் வந்து சேர்ந்தானில்லை. எனவே காதலியின் புலம்பலைச் சொல்லவும் வேண்டுமோ? உண்டி சுருங்கியது. உறக்கம் குறைந்தது. உடல் மெலிந்தது. காதலன் கூட்டுறவால் பெற்ற புத்தழகு போயிற்று. புத்தழகு மட்டுமா? இதற்கு முன் இருந்த இயற்கையழகும் இடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/102&oldid=550669" இலிருந்து மீள்விக்கப்பட்டது