பக்கம்:இன்ப வாழ்வு.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

இன்ப வாழ்வு


சென்று பிச்சையேற்றுப் பிழைப்பதைக்காட்டிலும் பட்டினி கிடந்து உயிர் விடுவது நன்றன்றோ? ஆனால் இவ்வீடு இருக்கும தெரு அத்தகைய தாழ்நிலை உடையதன்று. அத்தெருவில் உள்ள அனைத்து வீட்டினரும் விருந்தோம்பும் வேளாண்மை உடையவர்கள். இரப்பார்க்கு ஈயும் இயல் புடையவர்கள். பல விதத்திலும் குற்ற மில்லாத பண்புடை யவர்கள். இக்காரணம் பற்றியே ‘ஆசு இல் (குற்றமற்ற) தெருவில்’ என்று புலவர் பெருமான் பாடிப் போந்துளார். எனவே, இத்தகைய தெருவில் உள்ள நாயில்லாதனவும் அகன்ற வாயிலை உடையனவும் ஆகிய வீடுகளில், ஒருவருக்கு உணவளிக்க ஒரு வீடே போதும், பல வீடுகள், வேண்டா அல்லவா?

பிச்சையின் பெருமை

சிலர் பிச்சை போடுகின்றோம் என்று கடமையைக் கழித்து விடுவார்கள்; மிகச் சிறிதளவே இடுவார்கள். தமக்குப் பிடிக்காததும் வேண்டாததுமான பழைய உணவைக் கொடுப்பார்கள். உண்டு மிஞ்சிய எச்சில் உணவை இடுங் கொடியவர் சிலரும் உண்டு. மேலும், பிச்சைக்காரர்கள் கறிவகைகளைக் காணவும் முடியாது. இன்னும் சிலர் ஓரளவு ஒழுங்காகப் பிச்சையிடுவதாகச் சொல்லிக்கொள்வார்கள். அங்ஙனம் சொல்லிக் கொண்டு பிச்சைக்காரர்க்கெனத் தனியாகச் சமைப்பார்கள். கீழ்த்தரமான அரிசியால் சோறாக்குவார்கள். கீழே எறிந்து விடக்கூடிய காய்வகை களைக் கொண்டு கறி சமைப்பார்கள். குடிப்பதற்கு எந்தத் தண்ணீரை யாவது ஊற்றுவார்கள். இங்ஙனம் இடும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/121&oldid=550691" இலிருந்து மீள்விக்கப்பட்டது