பக்கம்:இன்ப வாழ்வு.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

147


பொருள். மேலும் ‘ஓ’ சேர்த்து எவனோ-எதற்கோ என்று வன்மையாகக் கண்டிக்கிறான். அவன் மற்ற அணிகலன் களைப் பொருட்படுத்தவில்லை- புறக்கணிக்கிறான் என்பதை ‘ஏதில தந்து என்னும் ஏனோ தானோ’ தொடர் அறிவிக்கின்றது, அதாவது வேண்டாத வேற்றுப் பொருளை வலியக் கொண்டுவந்து புகுத்துகிறார்கள் என்ற கருத்தைத்தான் ஏதில தந்து என்பது அறிவிக்கின்றது.

‘அணிகலன் அணிவது அழகு தருவதற்காக! இவளுக்கோ அழகு இயற்கையிலேயே இருக்கிறது. அங்ஙனமிருக்க, அணிகலன் அணிவிக்கும் காரணம் என்ன? எங்களிடம் இவ்வளவு செல்வம் இருக்கிறது என்பதை வெளியில் காட்டும் தற்பெருமை விளம்பரமா இது? அல்லது, இந்த நடிகையும் இதைத்தான் பயன்படுத்து கிறாள் என்று நடிகையின் படத்துடன் ஆடம்பரப் பொருளை அறிமுகப்படுத்தி அவள் வாயிலாக அப்பொருளுக்குப் பெருமை தேடுகின்ற வாணிக விளம்பரம் போல, தலை மகளுக்கு அணிவதன் வாயிலாக இந்த நகைகளுக்கு அழகு தேடவேண்டும் என்ற அவாவா இது? அல்லது தலைவியின் இயற்கையழகைப் புரிந்துகொள்ளமுடியாத குருட்டு மடைமையா இது? அல்லது, இவளுக்கு மேலும் மேலும் அழகு செய்து என்னைப்போன்ற இளைஞர்களை இன்னற் படுத்த வேண்டுமென்ற இழி நோக்கந்தானா இது? பின்னே என்ன காரணம்?’ என்று காலால் தரையை இடித்துக் கையால் பலகையைக் குத்திப்பேசிக் கேட்பவனைப்போல “அணி எவனோ” என்று அலறியுள்ளான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/148&oldid=550720" இலிருந்து மீள்விக்கப்பட்டது