பக்கம்:இன்ப வாழ்வு.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

167


தலைவியின் நெஞ்சில் தலைவன் குடிகொண்டிருக் கிறான் என்றால், அவள் அவனை மறவாது எப்போதும் நினைத்துக் கொண்டேயிருக்கிறாள், என்று பொருளாம். எத்துணை ஈடுபாடு! ஈண்டு, கள்ளில் ஆத்திரையனார்’ என்னும் புலவர், தாம் எப்போதும் நினைத்துக் கொண்டிருக் கும் ஆதனுங்கன் என்னும் அரசனை நோக்கி,

‘என் நெஞ்சம் திறப்போர் கின் காண்குவரே’ என்று பாடியுள்ள புறப்பாடல் ஒப்பு நோக்கத் தக்கது.

மேற்சொன்ன இரண்டு நிகழ்ச்சிகளும் இன்பத் துறையில் வள்ளுவர் கண்ட கற்பனைக் காட்சிகள் என்றாலும், தலைவனும் தலைவியும் எவ்வாறு தலையன்பு கொண்டு வாழவேண்டும் என்பதை உலகினர்க்கு நயமாக உணர்த்தியிருக்கும் ஆசிரியரின் உரை உணர்ந்து சுவைத்து மகிழ்வதோடு பின்பற்றப்பட வேண்டியதுமாகும். எனவே வள்ளுவர் கண்ட இன்ப இலக்கியம் எவ்வளவு தரமுடையது பாருங்கள்!

இணை பிரியாத அன்பின் உயர் எல்லைக்குத் தான் சென்று விட்டதாகத் தலைவன் எண்ணிக் கொண்டிருக்க அதை விட மிக உயர்ந்த எவரெஸ்ட் எல்லைக்குத் தலைவி சென்று விட்டதாக உள்ள இன்னொரு காட்சி யினையும் ஈண்டு காண்போம்.

தன்னை விட்டு என்றும் தலைவன் பிரியாதிருக்க வேண்டுமென்று தலைவி விரும்பினாள். அதற்குத் தலைவன் அவளை நோக்கி, ‘என் இன்னுயிர்த் தலைவியே! நான் உன்னைவிட்டுப் பிரியேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/168&oldid=550742" இலிருந்து மீள்விக்கப்பட்டது