பக்கம்:இன்ப வாழ்வு.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

21


காலத்தில் நாளிதழ், கிழமையிதழ், திங்கள் மூவிதழ், திங்கள் ஈரிதழ், திங்களிதழ், ஆண்டு மலர் முதலிய வற்றிற்குக் குறைவேயில்லை. இத்தகைய இதழ்களுட் சில, காதல் துறையின் மொத்த (Whole sale) விற்பனையாளராகத் காட்சியளிக்கின்றன. மேலும் காதல் கனிச்சாற்றைப் பிழிந்து கொடுக்கும் புதினங்கள் (நாவல்கள்) பல புற்றிசல்கள் போலப் புறப்பட்டு விட்டன. காதல் புகழ் பாடாத எழுத்தாளரே இல்லை என்று கூடர் சொல்லிவிடலாம்.

ஏன் இந்த நிலை? அன்றுதொட்டு இன்றுவரை தமிழ் நூற்களில் இன்பக் காதல்சுவை வற்றாது பெருக்கெடுத் தோடுவதற்குக் காரணம் என்ன? இவ்வினாவிற்குப் பல கோணங்களில் விடையிறுக்கலாம். சில விடைகள் வருமாறு:

1. இன்பியலாகிய காதல் இன்றி உயிர்த்தோற்றம் இல்லை - உலகம் இல்லை; அதனால் அதற்கு இன்றி யமையாத இடம் கிடைத்தது.

2. பல்வகைச் சுவைகளுள் காதல் சுவையினையே படிப்பவர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

3. எழுதுபவர்க்கும்கூடக் காதல்சுவை பற்றிப் புனைவதிலேயே விருப்பம் மிகுதி.

4. கடவுள் நெறி, நீதிநெறி போன்ற எத்துறை பற்றி எழுதினும், வெல்லம் அல்லது தேனோடு மருந்தைக் கலந்து குழந்தைக்குக் கொடுப்பதுபோல, காதல் சுவையோடு கலந்து எழுதினால்தான் மக்கள் விரும்பிப் படிப்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/22&oldid=514718" இலிருந்து மீள்விக்கப்பட்டது